ரயில்வே தேர்வு எழுத வந்த வாலிபரை தாக்கி வழிப்பறி

சென்னை, வேப்பேரி பகுதியில் ரயில்வே தேர்வு எழுத வந்த வாலிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் பூரான்மால் மீனா(26). இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு ரயில்வே துறை தேர்வில் பங்கேற்பதற்காக அங்கிருந்து வந்தார்.

இந்நிலையில் பூரான்மால் மீனா, வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண் உள்பட 4 பேர், பூரான்மாலை வழிமறித்து பணம், அவர் வைத்திருந்த விலை உயர்ந்த கைப்பேசி ஆகியவற்றை கேட்டனர். ஆனால் பூரான்மால், அவற்றை கொடுக்க மறுத்தார்.

உடனே அந்த நபர்கள்,பூரான்மாலை தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இது குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.