தடம் பதிக்கும் இந்தியா! UPI, ரூபே கார்டுகள் பிரான்ஸ், யுஏஇ, சிங்கப்பூரில் விரைவில் பயன்படுத்தலாம்

இந்தியாவின் யுபிஐ(upi) செயலி, ரூபே டெபிட், கிரெடிட் கார்டுகளை விரைவில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூரிலும் பயன்படுத்தலாம் என்று மத்திய தகவல்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இன்டர்நேஷனல் (NPCII) மற்றும் தி இன்டர்நேஷனல் ஆர்ம் ஆஃப் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(NPCI) ஆகியவை லைரா நெட்வொர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

லைரா நெட்வொர்க் என்பது பிரான்ஸில் செயல்படும் பேமெண்ட் நிறுவனமாகும். பிரான்ஸில் யுபிஐ செயலி செயல்பாட்டுக்கு வரும்போது, அது ரூபே கார்டுக்கும் ஊக்கமாக அமையும்.

ஏனென்றால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, ரூபே கிரெடிட் கார்டு விரைவில் யுபிஐ நெட்வொர்க்கில் இணைக்கப்படும்.

யுபிஐ செயலிகள் மூலம் ரூபே கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் பேமெண்ட் செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.

இந்தியாவின் யுபிஐ செயலி இந்தியா தவிர பூட்டான், சிங்கப்பூரில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர நேபாள அரசுடனும் என்பிசிஐ பேச்சு நடத்தி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஷ்ரெக் வங்கியுடனும் என்பிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களும் யுபிஐ மூலம் பேமெண்ட் செலுத்தலாம்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “பிரான்ஸின் லைரா நெட்வொர்க்குடன் என்பிசிஐ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் விரைவில் பிரான்ஸிலும் ரூபேகார்டு, யுபிஐ ஏற்கப்படும், அதன் மூலம் பணப்பரிமாற்றம்செய்யலாம்.

ஒரு மாதத்தில் 550 கோடி யுபிஐ பரிமாற்றங்களை இந்தியா செய்துள்ளது. பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது பெரிய சாதனை” எனத் தெரிவித்தார்.