இப்படி செஞ்சுபாருங்க…குறைந்தசெலவில் விமான டிக்கெட் புக் செய்யலாம்! எளிதான 5 வழிமுறைகள்

கோடைகால விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில் குறைந்த செலவில், பணத்தை சேமித்து ஆன்-லைன் மூலம் விமான பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதற்கென சில தனிப்பட்ட வழிமுறைகள் உள்ளன.

வெளிநாடு சுற்றுலா அல்லது உள்நாட்டில் வேறுமாநிலத்துக்கு சுற்றுலா செல்வதற்கு முதலில் விமான டிக்கெட் முன்பதிவு முக்கியம். முறையான திட்டமிடல், சேரும்இடம், தங்கும் ஹோட்டல், பார்க்கும் இடங்கள் ஆகியவற்றை சரியாகத் திட்டமிட்டால் குறைந்த செலவில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

முன்கூட்டியே முன்பதிவு:
டூர் செல்வதற்கான இடம், தேதி முடிவாகிவிட்டால். தாமதிக்காமல் உடனடியாக ஆன்-லைனில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் வழியாகும்.

காரணம் என்னவென்றால், கோடைகால விடுமுறை தொடங்கும் நேரத்ததில் விமானத்தில் டிக்கெட் கிடைப்பது கடினம், பலரும் ஒரேநேரத்தில் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் விலை உயர்ந்துவிடும்.

ஆதலால், டிக்கெட் முன்பதிவை டூர் செல்வதற்கான இடம் , தேதி முடிவானதும் டிக்கெட் முன்பதிவு செய்வது பணத்தை அதிகமாகச் சேமிக்க முடியும். இதில் சேமிக்கப்பட்ட பணத்தை வேறு வழியில் செலவிடலாம்.

நாளைத் தேர்வு செய்யும் சூட்சமம்:
பல்வேறு ஆய்வுகளில் கிடைத்த முடிவின்படி, ஒரு இடத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் பகல் நேரத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மாறாக வாரத்தில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நள்ளிரவு நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் கட்டணம் குறைவாக இருக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆதலால், டூர் செல்வற்கு டிக்கெட் முன்பதிவுக்கு திங்கள் முதல் புதன்கிழமை நள்ளிரவு நேரங்களைத் தேர்ந்தெடுங்கள்.

ஒப்பீடு செய்து டிக்கெட் வாங்குங்கள்:
விமானப் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் ஒரு இணையதளத்தை மட்டும் பார்க்கக் கூடாது. விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஏராளமான இணையதளங்கள் உள்ளன.

அவற்றை தீரஆய்வு செய்யும்போது, ஏராளமான தள்ளுபடிகள் கிடைக்கும். அதை ஒப்பீடு செய்து, அந்த நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டு சலுகைகளை உறுதி செய்து டிக்கெட் புக் செய்யலாம்.

இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஒரு இடத்துக்கு செல்ல ஒரே இணையதளத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்வதைவிட, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து பரிசோதிப்பதால் டிக்கெட் கட்டணத்தை ஒப்பீடு செய்து பார்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்தை அறிய முடியும்.

டிக்கெட் கட்டணக் குறைப்பு அலர்ட்:
விமான டிக்கெட் முன்பதிவு இணையதளங்களில் டிக்கெட் சலுகை, கட்டணக் குறைப்பு குறித்து அலர்ட் வருமாறு வசதி செய்யவேண்டும்.

அவ்வாறுசெய்துவிட்டால் சிறப்பு தள்ளுபடிகள், ஆஃபர்கள் வரும்போது அலர்ட் வரும் அப்போது குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

மேலும் கோஏர், ஏர் ஏசியா, ஜெட்ஸ்டார், இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்களின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் தளங்களை பின்தொடரும்போது கட்டணக் குறைப்பு அறிவிப்பு வரும்போது உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இன்காக்னிட்டோ மோடில் விமானத்தை தேடலாம்:
இணையதளத்தில் விமான டிக்கெட் குறித்து ஏராளமாக தேடியபின், கூகுள் சேர்ச்சில் incognito mode-ல் தேட வேண்டும். அவ்வாறு தேடும்போது, பழைய தேடுதல்கள் சேமிக்கப்படாது, உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வராது.

குறைக்கப்பட்ட கட்டண விவரங்களை அறியலாம். ஒரே லேப்டாப்பில் தேடும்போது, ஐபி எண் மூலம் ஒரேமாதிரியானதகவல்கள்தான் வரும்.

அதற்குப்பதிலாக நண்பர்கள், உறவினர்களின் லேப்டாப், கணினி மூலம் தேடி குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்யலாம்.