நீங்கள் எல்லாம் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால் அதற்கு மோடிதான் காரணம்: வைரலாகும் பிஹார் அமைச்சர் பேச்சு

நீங்கள் எல்லாம் உயிரோடு இருப்பதற்கு காரணமே பிரதமர் நரேந்திரமோடிதான் என்று பிஹார் மாநில அமைச்சர் ராம் சுரத் ராய் பேசியது வைரலாகியுள்ளது.

பிஹார் மாநிலத்தில் வருவாய் மற்றும் நிலச்சீர்திருத்த அமைச்சராக இருப்பவர் ராம் சுரத் ராய். பாஜகவைச் சேர்ந்த ராம் சுரத் ராய், ஒரு கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசியதுதான் வைரலாகியுள்ளது.

முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ராம் சுரத் ராய் பேசுகையில் “நீங்கள் எல்லாம் இன்று உயிரோடு இருக்கீறர்கள் என்றால் அதற்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடிதான்.

பிரதமர் மோடி அரசு உருவாக்கிய கொரோனா தடுப்பூசியால்தான் நாம் அனைவரும் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட்டோம், பொருளாதாரத்தையும் திறமையாகக் கையாண்டார்.

கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவில் மோடிஅரசு உருவாக்கிய தடுப்பூசியால் காப்பாற்றப்பட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் நடந்த அக்னிபாத் போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று அழைத்ததும் அமைச்சர் ராம் சுரத் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, 47 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது. ஆனால், அதை மத்திய அரசு மறுத்துவிட்டது.