குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளரா? மம்தா கட்சியிலிருந்து விலகினார்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காகத்தான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்கிறது, 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வரும் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாளாகும். இதுவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் பொதுவேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
பாஜகவின் உயர்மட்டக் குழுவான நாடாளுமன்றக் குழு இன்று மாலை டெல்லியில் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்த பெயர் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஏற்கெனவே 14 பேர் கொண்டகுழுவை பாஜக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் சார்பிலும் பொதுவேட்பாளர் நிறுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
கடந்த 15ம் தேதி மம்தா பானர்ஜி தலைமையில் கூடி விவாதித்து, சரத் பவார் பெயரையும், பரூக்அப்துல்லா பெயரையும் முன்மொழிந்தனர். ஆனால், இருவருமே அதை நிராகரித்தனர்.
மே.வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளராகப் போட்டியிட மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் மத்தியஅமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
அதற்கு ஏற்றார்போல் முன்னாள் நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யஷ்வந்த் சின்ஹா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளித்த மரியாதை மற்றும் கவுரவத்துக்கும் மம்தாபானர்ஜிக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
இப்போது தேசத்தின் பெரிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி அதிக எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற இப்போது வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
என்னுடைய செயலுக்கு மம்தாஜி சம்மதிப்பார் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.