உலகளவில் கொரோனா உயிரிழப்பு குறைந்து வருகிறது: உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகளவில் கொரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் குறைந்தது என்பது கடந்த ஓர் ஆண்டில் இல்லாத அளவு குறைவாகும் என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.


வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி,உலகளவில் கொரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 21.17 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.


கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலகளவில் மக்களுக்குச் செலுத்தப்படுவதன் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது, உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ்அதானம் கெப்ரியாசிஸ் வாராந்திர ஆய்வு குறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:


கொரோனாவில் பாதிக்கப்பட்டு உலகளவில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலகளவில் 50ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஓர் ஆண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பாகும். உலக நாடுகள் அளித்த கணக்கின்படி 50ஆயிரம், ஆனால், உண்மையில் உயிரிழப்பு அதிகமாகக் கூட இருக்கலாம்.


ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கொரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.

குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளி்ல் கொரோனாவில் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

You may have missed