குழந்தையை வைத்து பேருந்தில் ஜேப்படி செய்யும் பெண்கள்..!

சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் குழந்தையை வைத்து, ஓடும் பேருந்தில் ஜேப்படி செய்யும் பெண்களை தேடி வருகின்றனர்.

துரைப்பாக்கம் செக்கட்ரேட் காலனி பகுதியை சேர்ந்தவர் நா. மலர்விழி (55). இவர் புதன்கிழமை மாலை சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், தியாகராய நகரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் துரைப்பாக்கத்துக்கு வந்துக் கொண்டிருந்தார்.

அந்த பேருந்து, தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் நிறுத்தத்தில் நின்றது. அங்கு, 4 பெண்கள் ஒரு குழந்தையுடன் ஏறினர்.

அந்த நான்கு பெண்களும் மலர்விழியிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் அந்த பெண்கள், குழந்தையை மலர்விழியிடம் கொடுத்தனர்.

இதற்கிடையே அந்த பேருந்து, பெருங்குடி நிறுத்ததும் 4 பெண்களும் குழந்தையுடன் இறங்கினர். இந்நிலையில், துரைப்பாக்கம் வந்ததும் மலர்விழி, பேருந்தில் இருந்து இறங்கினார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து மலர்விழி, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.