நகை-பணம் தொடர்பான பிரச்சினை காவல் நிலையத்தில், தீக்குளித்த பெண்

பெரம்பலூர், குன்னம் காவல் நிலையத்தில், நகை-பணம் தொடர்பான புகாரை விசாரிக்கும் போதே, பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம், வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, இவரின் மகள் அகிலா (27). உடையார் பாளையத்தை சேர்ந்த பாரதி என்பவருக்கும் இவருக்கும், கடந்த 10 வருடம் முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, பரத் குமார் (9), யாழினி (5) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அகிலா, கணவரை விட்டு பிரிந்து அமரதீபன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இது தொடர்பான பிரச்சினை, குன்னம் காவல் நிலையத்தில் இருந்து வந்தது. தன்னுடைய எட்டு சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை அமர தீபன் வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என குன்னம் காவல் நிலையத்தில், தாய் ராணி புகார் கொடுத்தார்.

காவல் நிலையத்தில் வைத்து அகிலா, அமரதீபன் அவரின் தம்பி அஜீத் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அப்போது வாக்குவாதத்தில், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அகிலா தீக்குளித்தார். உடனடியாக காப்பாற்றி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் போலீஸ்க்காரர் ஒருவர் தீக்காயமடைந்தார். பின்னர், குன்னம் போலீசார், அமரதீபன், அஜித் ஆகியோரை கைது செய்தனர்.