பாஜக-நிதிஷ் கூட்டணி உடையுமா? ஆர்ஜேடி-ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியா? எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது விலகுவதா, அல்லது விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இதனால் பிஹாரில் அடுத்து என்ன நடக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சி இணைந்து ஆட்சி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக இரு தரப்புக்கும் இடையே சின்னசின்ன உரசல்கள் இருந்தாலும் பெரிதாக வெளியேதெரியவில்லை.

ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, எம்.பி.ஆர்பிசி சிங்கிற்கு கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரின் அனுமதியில்லாமலேயே பாஜக மத்திய அமைச்சர் பதவிவழங்கியது.

இது நிதிஷ்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் பாஜக மீது அதிருப்தியுடன் இருந்து வந்தார்.

இதனிடையே ஆர்பிசி சிங் மீது ஊழல் புகார் எழவே அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார், ஐக்கியஜனதா தளம் கட்சியிலிருந்தும் விலகினார்.

இந்நிலையில் ஆர்பிசி சிங்கை வைத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைத்து பாஜக தனித்து ஆட்சிஅமைக்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த நிதிஷ் குமார், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும்முடிவுக்கு வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தற்போது இடைத் தேர்தலைச் சந்திக்க தயாராகஇல்லை.

இதனால் நிதிஷ்குமார் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பேசியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

இதனிடையே பிஹார் அமைச்சர் விஜய் குமார் சவுத்திரி நிருபர்களிடம் கூறுகையில் “எனக்குத் தெரிந்து பாஜக தலைமையுடன் நிதிஷ் குமாருக்கு எந்தவிதமான முரண்பாடும், மனக்கசப்பும் இல்லை என்று தெரிகிறது.

ஜனதா தர்பார் நிகழ்ச்சியில்கூட பாஜகவைச்சேர்ந்த அமைச்சர்களுடன், நிதிஷ்குமாரும் பங்கேற்றார்.

எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆர்பிசி சிங் வெளியேறிவிட்டதால் அது குறித்துஆலோசிக்கவே எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.

ஆர்சிபி சிங் நீண்டகாலமாகவே தலைமையுடன் அதிருப்தியுடன் இருந்தார், பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அவரிடம் விளக்கம் கேட்டபோதுதான் பதில் அளிக்காமல் கட்சியிலிருந்து விலகியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

நிதிஷ் குமாருக்கு அடுத்தபடியாக கட்சியில் மூத்த தலைவராக இருப்பவர் ஆர்சிபி சிங். இவரை வைத்துதான் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் மாநிலத் தலைவர் ஜகதாநனந்த் சிங் கூறுகையில் “நிதிஷ் குமார் கட்சியிலிருந்து கூட்டணி தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சும் பேசவில்லை.

யாரும் அது குறித்து பேசி எங்களிடம் வரவில்லை. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை முக்கிய முடிவுகளை தேஜஸ்வி யாதவ், லாலுபிரசாத் யாதவ்தான் எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே வரும் 11ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சோனியாவுடன் நிதிஷ் குமார் தொலைப்பேசியில் பேசிவிட்டார் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆதலால் இன்று நடக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் மாநிலத்தில்ல ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலுமா என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.