மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, 2 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று; கணவர் தற்கொலையால் சோகம்

சென்னை, பல்லாவரம், பொழிச்சலூர் பகுதியில், கடன் தொல்லையால் மரம் அறுக்கும் ரம்பத்தால், மனைவி- இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொன்று, நாட்டு மருந்து கடைக்காரர் தற்கொலை செய்துக்கொண்டது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பல்லாவரம், பொழிச்சலூர், வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (41).  
இவர் அதே பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார்.

இவரது மனைவி காயத்ரி (39). இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் அரிகிருஷ்ணன் (9) ஆவர். நித்யஸ்ரீ, தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், அரிகிருஷ்ணன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில், பிரகாஷ்,  குடும்பத்தினருடன் தூங்கச் சென்றார். இன்று காலை, வெகு நேரமாகியும், பிரகாஷ்   வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும், அவர்கள் யாரும் வெளியில் வரவில்லை. இதையடுத்து அருகில் வசிப்போர், ஜன்னல் வழியாக,  வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது, கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது, வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் நித்யஸ்ரீ, அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

உடனடியாக, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு, சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, உள்ளே சென்றனர். நான்கு பேரும் இறந்து கிடந்தனர்.

அருகில் மரம் அறுக்கும் ரம்பம் இருந்தது. மனைவி, இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று, பிரகாஷ் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. வீடு முழுவதும், அவர்களின் ரத்தம் வழிந்தோடி இருந்தது.

 கடன் தொல்லை;

நாட்டு மருந்து கடை நடத்தி வந்த பிரகாஷ், கொரோ,னா காலக்கட்டங்களில், கடன் வாங்கி குடும்பத்தை கவனித்து வந்தார்.

மருந்து கடையில், அவருக்கு வியாபாரம் இல்லை. வாங்கிய கடனை அடைக்கவும் முடியவில்லை. கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

கடன் தொல்லை அதிகரித்ததால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
 
போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

பின்னர், உறவினர்களிடம், நான்கு பேரின் உடல்களை ஒப்படைத்தனர், இந்த சம்பவம், அந்த பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.