போதையில் டார்ச்சர் செய்ததால், அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவனை கொன்ற மனைவி கைது

சென்னை, ஆவடி, முத்தாப்புதுப்பேட்டையில் போதையில் டார்ச்சர் செய்த ஆத்திரத்தில், அம்மிக்கல்லை தலையில் போட்டு, கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், கெடார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(37). இவரது மனைவி விஜயலட்சுமி (27). இவர்களுக்கு, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.

விஜயலட்சுமிக்கு, கிருஷ்ணன், அத்தை மகன் ஆவார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர், இவர்கள் திருமணம் செய்தனர்.

சென்னை, ஆவடி, முத்தாப்புதுப்பேட்டை,தும்பூர் கிராமத்தில் உள்ள டைமன் செங்கல் சூளையில் தங்கியிருந்து கிருஷ்ணன், விஜயலட்சுமி  ஆகியோர் வேலை பார்த்தனர். 

தினமும் மது குடித்துவிட்டு வரும் கிருஷ்ணன், விஜயலட்சுமியை அடித்து உதைப்பாராம். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவில், மதுப்போதையில் வந்த கிருஷ்ணன், விஜயலட்சுமியை டார்ச்சர் செய்தார்.

ஆத்திரத்தில், விஜயலட்சுமி ,அம்மிக்கல்லை எடுத்து, கிருஷ்ணன் தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செங்கல் சூளை ஊழியர் ஜெயபால், முத்தாப்புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தந்தார்.

போலீசார், சம்பவம் இடம் விரைந்து வந்து, கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, விஜயலட்சுமியை கைது செய்தனர்.