முகமது ஷமி மட்டும் தனியாக ஆடவில்லை; ஏன் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை: இந்திய அணிக்கு உமர் அப்துல்லா கேள்வி

துபாயில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்குஎதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முகமது ஷமி மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும்போது அவருக்கு ஆதரவாக இந்திய அணி ஏன் நிற்கவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தி்த்தது.
இந்த தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊகடங்களில் விமர்சித்தனர்.

முகமது ஷமி குறித்தும் அவரின்குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர்.

ஷமியை டேக் செய்து தொடர்ந்து ட்ரால் செய்து வருகின்றனர். மேலும், விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்தும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.


இது குறித்து முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்திய அணி நிர்வாகவோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
முகமது ஷமிக்கு ஆதரவாக தேசியமாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கருத்துத் தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய 11 பேரில் முகமது ஷமியும் ஒருவர்.

முகமது ஷமி மட்டும் தனியாக விளையாடவில்லை. உங்கள் சக வீரர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மோசமாக அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் ட்ரால் செய்யப்படும்போது, அவருக்கு ஆதவாரக நிற்காமல், கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் மைதானத்தில் முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்தது எந்தவிதத்திலும் பொருட்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.


கறுப்பின மக்களுக்கு ஆதரவாக நேற்று இந்திய வீரர்கள் போட்டி தொடங்கும் முன் தரையில் ஒருகால் முழங்காலி்ட்டு ஆதரவு தெரிவித்தனர். பாகிஸ்தான் வீரர்களோ மார்பில் கை வைத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.