யார் இந்த ஜிதேஷ் ஷர்மா? சஞ்சு சாம்சனுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் வீரரைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் காயமடைந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த் விபத்தில் பாதிக்கப்பட்டது, கேஎல்.ராகுல் ஓய்வில் இருப்பது போன்ற சூழலுக்கு மத்தியில் அணியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் மட்டுமே இருக்கும்போது, கூடுதலாக ஜிதேஷ் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
2022ம் ஆண்டில் ஜிதேஷ் ஷர்மா இந்திய அணியில் இடம் பெற்றாலும், அவர் மாற்று வீரராக இருந்தார், அனைத்துப் போட்டிகளிலும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருந்தார்.
சாம்சனைப் பொறுத்தவரை 2023ம் ஆண்டு சிறப்பாகத் தொடங்கி, இலங்கை டி20 தொடரில் இடம் பெற்றார். ஆனால், துரதிர்ஷ்டமாக இடதுமுழங்காலில் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்தே விலகும் சூழல் உருவாகியுள்ளது.
ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஏன் வாய்ப்பு?
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜிதேஷ் ஷர்மா, விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன். அதிலும் 5 மற்றும் 6வது நிலையில் களமிறங்கி அணியை வெற்றிக்கு கொண்டு செல்லக்கூடிய பினிஷர் ரோலில் விளையாடக் கூடியவர்.
இந்திய அணியில் உள்ள இஷான் கிஷன் தொடக்க நிலையில் மட்டுமே விளையாடுகிறார், நடுவரிசையில் களமிறங்கிய பல போட்டிகளில் இஷான் கிஷன் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.
ஆனால், ஜிதேஷ் ஷர்மா ஐபிஎல் டி20 தொடர், ரஞ்சிக் கோப்பை, சையது முஷ்டாக் அலி போன்ற தொடரில் நடுவரிசையில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வழங்கியுள்ளார்.
ஆட்டத்தை முடித்துவைக்கும் பினிஷர் ரோலை ஜிதேஷ் ஷர்மா செய்துவருவதால்தான் அவரை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது.
யார் இந்த ஜிதேஷ் ஷர்மா?
ஜிதேஷ் ஷர்மா 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றாலும், ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. சிஎஸ்கே அணியில் இடம் பெற்று ஒரு போட்டியில் மட்டும் ஜிதேஷ் ஷர்மா 26 பந்துகளில் 17 ரன்கள் சேரத்தார்.
கடந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜிதேஷ் ஷர்மா தனது திறமையை நிரூபித்தார். 10இன்னிங்ஸ்களில் ஆடிய ஜிதேஷ் ஷர்மா 234 ரன்கள் சேர்த்தார். இதில் அதிகபட்சமாகடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 34 பந்துகளில் 44 ரன்களை ஜிதேஷ் சேர்த்தார்.
உள்நாட்டளவில் விதர்பா அணிக்காக ஜிதேஷ் ஷர்மா விளையாடி வருகிறார். 2012-13 கூச்பெஹர் தொடரில் 537ரன்கள் சேர்த்து ஜிதேஷ் சீனியர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ம் ஆண்டு மார்ச்சில் விஜய் ஹசாரே கோப்பையில் விதர்பா அணியில் ஜிதேஷ் களமிறங்கினார்.
2015-16ம் ஆண்டு சையது முஷ்டாக் அலி தொடரில் ஜிதேஷ் 343 ரன்கள் சேர்த்து, 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதையடுத்து ஐபிஎல் ஏலத்தில் ரூ.10 லட்சத்துக்கு மும்பை அணி ஜிதேஷ் ஷர்மாவை வாங்கியது.
2022 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஜிதேஷ் ஷர்மாவை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. கடந்த தொடரில் தன்னை நிரூபித்து பஞ்சாப் அணிக்கு பெருமை சேர்த்தார் ஜிதேஷ் ஷர்மா.
அதனால்தான் சமீபத்தில் ஏராளமான வீரர்களை விடுவித்த பஞ்சாப் அணி ஜிதேஷ் ஷர்மாவை விடுவிக்கவில்லை.