ரூபாய் மதிப்பு சரிந்தால் உங்கள் பணம் என்னவாகும்? மதிப்பை யார் தீர்மானிக்கிறார்கள்? டாலருக்கு எதிராக ஏன் மதிப்பீடு?

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிந்தால் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்துக்கு என்ன நடக்கும், ரூபாய் மதிப்பை யார் தீர்மானிக்கிறார்கள், டாலருக்கு எதிராகஏன் ரூபாய் மதிப்பிடப்படுகிறது ஆகிய கேள்விகளுக்கு பதில் தேடுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக வரலாற்றில் இல்லாத சரிவைச் சந்தித்து வருகிறது என்று செய்திகள் வருகின்றன. அதாவது டாலருக்கு எதிராக ரூ.77.56 வரை சரிந்தது.

ரூபாய் மதிப்பு சரியும் போது, என்னாகும் என்றால், டாலரை வாங்க அதிகமாக பணம் கொடுக்க வேண்டும், டாலர் வைத்திருப்பவோர் குறைவான எண்ணிக்கையில் அதிகமாக இந்தியாவில் செலவிடலாம்.

இதுதான் மதிப்பு வீழ்ச்சியின் சுருக்கம் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

அமெரிக்க டாலர் உலகளவில் ஏற்கப்பட்ட கரன்ஸி. அமெரிக்க டாலர், யூரோ கரன்ஸி இரண்டுமே சர்வதேச சந்தையில் ஏற்கக்கூடியவை.

சர்வதேச வங்கிகளில் டாலரின் பங்கு மட்டு்ம் 64சதவீதமாகும், யூரோ 20 சதவீதம். அமெரிக்கப் பொருளாதாரத்தின் வலிமையை டாலர்தான் வெளிப்படுத்துகிறது.

உலகில்85 சதவீத சர்வதேச வணிகம், கச்சா எண்ணெய், தங்கம், உள்ளிட்டவை டாலரில்தான் நடக்கின்றன. உலகளவில் 40 சதவீத கடன்கள் உலக நாடுகளுக்கு வழங்கப்படுபவையும் டாலரில்தான் வழங்கப்படுகின்றன.

180க்கும் மேற்பட்ட நாடுகள் டாலரைத்தான் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்துகின்றன. ஆதலால், டாலரை அடிப்படையாக வைத்துதான் இந்திய ரூபாய் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

எப்போது டாலர் மதிப்பு உயர்வாக இருப்பது ஏன்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை விரிவடையும் போது டாலரின் மதிப்பு உயரும், ரூபாய் மதிப்பு சரியும்.

அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகமாகும்போது நம்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை வரிவடையும் அப்போது டாலரின் மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

குறைவாக ஏற்றுமதி செய்து, இறக்குமதி செய்ததற்கு அதிகமாக டாலரில் செலுத்தும்போது, டாலரின் தேவை அதிகரிக்கும். அப்போது இயல்பாகவே ரூபாய் மதிப்பு நெருக்கடிக்குள்ளாகி சரியும், டாலர்மதிப்பு அதிகரிக்கும்.

ஆகவே வர்த்தகப்பற்றாக்குறை விரிவடையும்போது டாலர் மதிப்பு வலுப்பெறும்.

நடப்புப் பிரச்சினை:
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 2வது மிகப்பெரிய நாடு ரஷ்யா. உலகளவில் கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் 3-வது நாடு இந்தியா.

தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது டாலரில் இந்தியா அதிகமாக செலுத்த வேண்டும். டாலரின் தேவை அதிகரிக்கும்போது, ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கும்.

சீனா,அமெரிக்கா இரு நாடுகளும் இந்தியாவின் சிறந்த வர்த்தகக் கூட்டாளிகள். ஆனால், சீனாவில் கொரோனா காரணாக பல நகரங்கள் லாக்டவுனில் மூடப்பட்டிருப்பதால் இந்தியாவுக்கான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனாலும் ஏற்றுமதி குறைந்து ரூபாய் மதிப்பு குறைகிறது.
பங்குச்சந்தை, கடன் பத்திரச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப்பெறும்போது டாலரின் தேவை அதிகரிக்கும்.

அப்போது டாலர் இயல்பாகவே வலுப்பெற்று ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கும். டாலர் வலுப்பெறும்போது அமெரிக்கப் பொருளாதாரம் வலுப்பெறும் ஆனால், ரூபாய் மதிப்புக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். இந்திய ரூபாயின் வாங்கும் சக்தியைப் பாதிக்கும், குறைக்கும்.

ரூபாய் மதிப்பை யார் தீர்மானிக்கிறார்கள்:
ரூபாய் மதிப்பை இந்திய அரசும் தீர்மானிக்கவில்லை, அமெரிக்காவும் தீர்மானிக்கவில்லை. எந்த தனிநபரும் தீர்மானிக்க முடியாது, அமைப்போ, நிறுவனத்தாலும் முடியாது.

அந்நியச் செலாவணி பரிமாற்றச்சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்பவும், தேவை மற்றும் சப்ளையின் அடிப்படையிலும்தான் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணமாக இறக்குமதி அதிகரிக்கும்போது டாலரில் பணம் செலுத்த இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிக்கும்.

அப்போது ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கும். ஏற்றுமதி அதிகரிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து டாலர் வரத்து இந்தியாவுக்குள் வரும், ரூபாய் மதிப்பு உயரும். ரூபாய் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாகும்.

யாருக்கு லாபம்:
ரூபாய் மதிப்பு சரியும்போது டாலர் மதிப்பு வலுவாகும். இந்த நிலை ஏற்றுமதியாளர்களுக்குதான் ஏற்றது. என்ஆர்ஐக்கள் அமெரிக்க வங்கிகளில் கடன் பெற்று இந்தியச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்த்து எடுப்பார்கள்.

அதிகமான டாலரை கடன் பெற்று இந்தியாவுக்கு பணமாக அனுப்ப முடியும். ரூபாய் மதிப்புசரிவு ஒருவகையில் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

அதேநேரம் இறக்குமதியாளர்கள் அதிகமான ரூபாய் கொடுத்து டாலர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். ஏன் அதிகமாக ரூபாய் நோட்டு அச்சடிக்கக்கூடாது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அல்லாமல், தங்கம் கையிருப்புக்கும் அதிகமாக, ரிசர்வ் வங்கி அதிகமான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டால் பேரழிவு ஏற்படும்.

அதிகமான பணம் பொருட்கள், சேவைகளுக்கான தேவையை அதிகப்படுத்தும். ஹைபர் பணவீக்கம் ஏற்படும்.

இலங்கையில் ஏற்பட்டதுபோல் பணத்துக்கு மதிப்பு இருக்காது. எந்தப் பொருட்களையும் வாங்க முடியாத நிலை ஏற்படும்.