அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள் என்ன?

அக்டோபர் 1ம்தேதி (இன்று) முதல் அடல் பென்சன் திட்டம் முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் வரை 5 முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அதுகுறித்த விவரம் வருமாறு.

டீமேட் (Dmate) கணக்குகளுக்கு 2 முறை அனுமதி அவசியம்
டீமேட் கணக்கு வைத்திருப்பவோர் அல்லது இன்டர்நெட் முறையில் பங்குச்சந்தையில் வணிகம் செய்பவர்கள், வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் பங்குச்சந்தை வியாபாரம் செய்பவர்கள் 2 முறை அங்கீகாரம் அளித்தல் முறை இன்று முதல் அமலாகிறது.

அதாவது பயனாளிகள் தங்களின் பாஸ்வேர்டு அல்லது பின் எண் மூலம் கணக்கை ஓபன் செய்தபின், 2வதாக கணக்கு வைத்திருப்போரின் பதிவு செய்த செல்போன் எண் அல்லது மின்அஞ்சல் ஆகியவற்றுக்கு ஓடிபி எண் வரும்.

இந்த ஓடிபி எண்ணையும் பதிவுசெய்தால்தான் டிமேட் கணக்கு செயல்பாட்டுக்கு வரும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

கிரெடிட் கார்டு விதிமுறைகள்;
கிரெடிட் கார்டுகள் வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் அக்டோபர் 1ம் முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, கிரெடிட் கார்டு ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அந்த கார்டை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு கார்டின் உரிமையாளரிடம் இருந்து ஓடிபி எண் பெற்று ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

ஒருவேளை கிரெடிட் கார்டு பெற்றவர் 30 நாட்களுக்குள் அந்த கார்டை ஆக்டிவேட் செய்யாவிட்டால், கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் அந்த கிரெடிட் கார்டை அடுத்த 7 நாட்களுக்குள் கார்டு வழங்கிய நிறுவனங்கள் ரத்து செய்துவிட வேண்டும். ரத்து செய்வதற்காக வாடிக்கையாளரிடம் எந்தக் கட்டணமும் கேட்கக்கூடாது.

கிரெடிட் கார்டு வைத்திருப்போரின் அனுமதியில்லாமல் கிரெடிட் கார்டின் கடன் தொகை அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது.

அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இந்த நடவடிக்கையில் கார்டு வழங்கு நிறுவனங்கள் இறங்க வேண்டும்.

கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்த தாமதமாகினால் வாடிக்கையாளர்களுக்கு கூட்டு வட்டி, வரி போன்றவை விதிக்கக்கூடாது.

அடல்பென்சன் யோஜனா திட்டம்;
வருமானவரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர்வதற்கு அனுமதி கிடையாது என்று மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதிக்கு பின் அல்லது அதற்கு முன் அடல் பென்சன் திட்டத்தில் ஒருவர் சேர்ந்திருந்தால், அவர் வருமானவரி செலுத்தியவரா அல்லது இல்லையா என்பது கண்டறியப்படும்.

அவர் வருமானம் செலுத்துபவராக இருந்தால், அவர் இதுநாள்வரை செலுத்திய பணம் திருப்பித் தரப்படும் என நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரெடிட், டெபிட் கார்டு டோக்கனைசேஷன்;
கிரெடிட், டெபிட் கார்டு டோக்கனைசேஷன் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

ரிசர்வ் வங்கி வகுத்த விதிகளின்படி, கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோர் ஆன்-லைன் ஷாப்பிங், ஆன்பரிமாற்றம் செய்யும்போது, பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்ய டோக்கனைசேஷன் பயன்படும்.

இதன்படி கார்டு உரிமையாளர்கள் தங்களின் சிவிவி எண், 16இலக்க எண், எக்ஸ்பயரி தேதி ஆகியவற்றை இனிமேல் ஆன்-லைன் நிறுவன இணைதளத்தில் பதிவு செய்யத் தேவையில்லை.

அவ்வாறு இதற்கு முன் ஆன்லைன் நிறுவனங்கள் பதிவு செய்திருந்தாலும் அதை நீக்க வேண்டும்.

டோக்கனைசேஷன் மூலம் கார்டு வைத்திருப்போர் புதிதாக டோக்கன் உருவாக்கி அதன் மூலம் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யலாம்.

என்பிஎஸ் சந்தாதாரர்கள் இ-நாமினேஷன் செய்தல்
ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அக்டோபர் 1ம் தேதி முதல் தேசிய பென்ஷன் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது.

இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் துறையில் பணியாற்றுவோர் இ-நாமினேஷன் மூலம் தங்களின் வாரிசுகளை பரிந்துரைக்கலாம்.