கட்டட சுவர் இடிந்து விழுந்து, பெண் பொறியாளர் பலி, அண்ணாசாலையில் பரபரப்பு சம்பவம்!

அண்ணாசாலை பகுதியில், பழமையான கட்டடத்தை இடிக்கும்போது, சுவர் இடிந்து விழுந்து, பெண் பொறியாளர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

சென்னை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை அருகே, சேதமடைந்த பழமையான பழைய கட்டடம் இடிக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில், ஜேசிபி எந்திரம் மூலம் கட்டடம் இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பொதுவாக இதுபோன்று கட்டடம் இடிக்கும்போது, அங்கு வேலை ஆட்கள் நின்றபடி, அந்தவழியாக செல்வோரை வேறு வழியாக செல்லும்படியாக எச்சரிப்பர். ஆனால், அதுபோன்று வேலை ஆட்கள் அங்கு நிற்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், அங்கு சென்ற பெண் உட்பட இருவர் மீது சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி இருவரும் உயிருக்குப்போராடினர்.

தகவல் கிடைத்து, தேனாம்பேட்டை, எழும்பூர் பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

சுமார் அரை மணி நேரம் போராடி, இருவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் வழியிலேயே பெண் உயிரிழந்தார். ஆயிரம் விளக்கு போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி முருகேசன் மகள் பத்மப்ரியா(22) என தெரிந்தது.

எம்.சி. ஏ படித்துள்ள இவர், சென்னை, பம்மலில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில், மென் பொறியாளராக வேலை பார்த்து வந்ததும், நேற்று வழக்கம் போல் அந்த பகுதியை கடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

காயமடைந்தவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் விக்னேஷ் குமார்(22) என தெரிந்தது. அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அங்கு இரண்டு மணி நேரம் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உரிய பாதுகாபாபு ஏற்பாடுகள் செய்யாமல் உயிர் பலியை ஏற்படுத்தியதாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து,
ஜேசிபி உரிமையாளர் ராமபுரத்தை சேர்ந்த ஞானசேகர்(48) ஓட்டுனர் பாலாஜி(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள  கட்டடத்தின் உரிமையாளர் சையத் அலி, பொறியாளர் ஷேக், ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் ஆகியோரை தேடி வருகின்றனர்.