பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: சென்செக்ஸ் உயர்வு! நிப்டி சரிவு!

இந்தியப் பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் பிற்பகலுக்குப்பின், கடும் ஊசலாட்டத்துடன் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் ஏற்றத்துடன் முடிந்தாலும், நிப்டி சற்று சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது.

அமெரிக்கப் பங்குச்சந்தையில் உயர்வான போக்கு, பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தது ஆகியவற்றின் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் 3வது காலாண்டு அறிக்கை லாபத்தோடு இருப்பதால், அமெரிக்காவின் பங்குச்சந்தையும் சாதகமாக நகர்ந்து வருகிறது.

இந்தியப் பங்குச்சந்தைகள் சாதகமாக இருப்பது,பட்ஜெட்டுக்கு முன்புவரை உயர்வுடன் இருக்க உதவும். இதேநிலை நீடித்தால், நிப்டி 18,200புள்ளிகளுக்கு மேல் உயரவும் வாய்ப்புள்ளது.

3ம் காலாண்டு முடிவுகள் பலமுக்கிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. இதனால் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் வாங்குவதால், சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டது.

இதனால் தொடர்ந்து 2வது நாளக இந்தியப் பங்குசந்தைகளும் ஏற்றத்தோடு காலையில் தொடங்கின. ஆனால் பிற்பகலுக்குப்பின், சந்தையில் கடும்ஊசலாட்டம் காணப்பட்டது நிப்டி, சென்செக்ஸ் லாபப்புள்ளிகளை இழக்கத் தொடங்கியது.

மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயர்ந்து, 60,978புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி ஒரு புள்ளி குறைந்து 18,118 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில், 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் மற்ற 16 நிறுவனப் பங்குகள் சரிவிலும் முடிந்தன.

குறிப்பாக டாடா மோட்டார்ஸ், மாருதி, எச்சிஎல் டெக்,எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி, இன்டஸ்இன்ட் வங்கி, டிசிஎஸ், ஐடிசி, டெக்மகிந்திரா, பார்தி ஏர்டெல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தன.

நிப்டியில், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதிசுஸூகி, எச்சிஎல் டெக்னா, எச்டிஎப்சி வங்கி, ஆகிய பங்குகள் அதிக லாபமடைந்தன.

ஆக்சிஸ் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் பங்குகள் சரிந்தன.

நிப்டி துறைகளில் உலோகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ரியல்எஸ்டேட் ஆகிய துறைகளின் பங்குகள் விலை சரிந்தன. ஆட்டமொபைல், ஐடி, எப்எம்சிஜி பங்குகள் விலை உயர்ந்தன.