பெங்களூரு IKEA கடையில் கட்டுக்கடங்காத கூட்டம்: 3 மணிநேரம் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்

பெங்களூரு நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஸ்வீடனின் ஐகேஇஏ(IKEA) பர்னிச்சர் கடையில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. ஏறக்குறைய 3 மணிநேரம் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்தன.

ஏராளமான வாடிக்கையாளர்கள் பொறுமையிழந்து வீட்டுக்குத் திரும்பினர், சிலர் எப்படியாவது காத்திருந்து பர்னிச்சர்களை வாங்கிட காத்திருந்தனர், சிலர் தங்களின் பொறுமையின் அளவை ட்விட்டரில் கொட்டித் தீர்த்தனர்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்களைத் தயாரிக்கும் ஐகேஇஏ நிறுவனம் இந்தியாவில் கிளைகளைத் தொடங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 4 கிளைகளை ஐகேஇஏ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதில் 4-வதாக பெங்களூருவில் உள்ள நாகசந்திரா பகுதியில் கடந்த 22ம் தேதி கிளையைத் திறந்தது.

பெங்களூருவின் நாகசந்திரா பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில், 4.60 லட்சம் சதுரடியில் கடை திறக்கப்பட்டுள்ளது.

இங்கு 7ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்கள் உள்ளன. இதற்கு முன் ஹைதராபாத், நவி மும்பை, மும்பை ஓர்லி ஆகிய இடங்களில் ஐகேஇஏ ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது.

பெங்களுருவில் உள்ள நாகஸந்திரா பகுதியில் ஐகேஇஏ ஸ்டோருக்கு மக்கள் நேற்று விடுமுறை என்பதால் படையெடுக்கத் தொடங்கினர்.

ஐகேஇஏ ஸ்டோருக்கு நேற்று காலை முதலே பெங்களுரு நகரவாசிகள் கார்களிலும், இரு சக்கரவாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இதனால் கடையில் நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். வாடிக்கையாளர்கள் பொறுமையை் சோதிக்கும் வகையில் 3 மணிநேரம் வரை காத்திருந்தனர்.

கூட்டத்தைச் சமாளிக்க கடையில் இருந்த பாதுகாவலர்கள் பெரும்பாடுபட்டனர். பொருட்களை வாங்க குழந்தைகளுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைநிர்வாகம் சார்பில் எந்தவிதமான வசதிகளும் செய்யவில்லை.

இதனால், குழந்தைகளுடன் வந்திருந்த வாடிக்கையாளர்கள் பலர் வெறுப்படைந்து வீட்டுக்குத் திரும்பினர்.

பெங்களுரு மக்கள் அளித்த வரவேற்புக்கு ஐகேஇஏ நிறுவனம் ட்விட் செய்திருந்தது, அதில் “பெங்களூரு, உங்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மகிழ்ச்சி.

3 மணிநேரமாகக் காத்திருக்கிறீர்கள். பொருட்களை வாங்க வரும்போது திட்டமிட்டு வாருங்கள்” எனத் தெரிவித்தது.

நாகசந்திரா மெட்ரோ ரயில்நிலையத்துக்கு வழக்கமாக தினசரி 13 ஆயிரம் பயணிகளுக்குள்தான் வருகை இருக்கும்.

ஆனால் நேற்று மட்டும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்திருந்தனர என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்பிஜி நிறுவனத்தின் தலைவர் ஹரிங் கோயங்கா ட்விட்டரில் ஐகேஇஏ ஸ்டோரில் மக்கள் கூட்டத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில் “மகாராஷ்டிராவில் புதிதாக ஆட்சி அமைக்கும் எம்எல்ஏக்கள் கூட்டமில்லை.

நம் நாட்டுக்குள் நுழைய குடியேற்ற அலுவலகத்தில் குவிந்திருக்கும் கூட்டமும் இல்லை. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக வந்துள்ள மக்கள் கூட்டமும் அல்ல.

திருப்பதி கோயிலில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களும் அல்ல. பெங்களூருவில் ஐகேஇஏ ஸ்டோர் திறப்பால் குவிந்த மக்கள் கூட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.