கோவிஷீல்ட், கோவாக்ஸின் இரு தடுப்பூசிகளும் சமமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

கோவாக்ஸின், கோவஷீல்ட் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட், கோவாக்ஸின் இரு மருந்துகளும் சமமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க இந்தியாவில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் இணைந்து கோவாக்ஸின் தடுப்பு மருந்தையும், சீரம் நிறுவனமும், ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா இணைந்து கோவிஷீல்ட் மருந்தையும் கண்டுபிடித்துள்ளன.

இந்த தடுப்பு மருந்துகளை முதியோர்களும், 45 வயது முதல் 59 வயதுள்ள இணை நோய்கள் இருப்போரும் இலவசமாக செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா

டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்றனர்.

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில் “கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம், மக்கள் கொரோனா பரவல் முடிந்து விட்டதாக நினைத்து விட்டார்கள், கொரோனா தடுப்பு விதிகளை யாரும் பின்பற்றவில்லை. என்ன செய்துவிடப் போகிறது கொரோனா எனும் மெத்தனப் போக்கான மக்களின் மனநிலை தான் பரவல் அதிகரிக்க காரணம் இன்னும் சிறிது காலத்துக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகியவை ஒருவருக்கு செலுத்தினால் குறைந்தபட்சம் 8 முதல் 10 மாதங்கள்உடலில் நல்ல பாதுகாப்பை வழங்கும்.  சில நேரங்களில் அதற்கு அதிகமான காலம் கூட வழங்கும். இரு தடுப்பூசிகளிலும் எந்தவிதமான மாறுபாடும் இல்லை, இரு தடுப்பூசிகளும் சமமான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கக் கூடியவை. நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இரு தடுப்பூசிகளும் தரமானவை, பாதுகாப்பானவை, நீண்ட காலத்துக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியவை. இவ்வாறு குலேரியா தெரிவித்தார்.

அப்போது வி.கே.பால் பேசியதாவது:

கொரோனா பரவல் சங்கிலியை நாம் உடைப்பதற்கு தனிமைப்படுத்துதல், பரிசோதனையை தீவிரப்படுத்துதல் போன்றது, கொரோனா தடுப்பூசியும் ஒரு கருவி  தான்.

கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் செலுத்தவே அரசு விரும்புகிறது. ஆனால், நமகுக்கு மிகவும் குறைவாக கிடைப்பதால், முன்னுரிமை அடிப்படையில் வயதினரைத் தேர்வு செய்து தடுப்பூசி செலுத்துகிறோம்.

அதிகமான உயிரிழப்பு என்பது, இணை நோய்கள் இருப்பவர்கள் மத்தியிலும், முதியோர் மத்தியில் தான் ஏற்படுகிறது அதில் தான் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கறோம். இந்த வயதில் உள்ள மக்கள் யாரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் கண்டிப்பாக தயக்கம் காட்டக் கூடாது. மற்ற வயதினரை விட இவர்களுக்கு இவர்களுக்குத் தான் கொரோனா தடுப்பூசி முக்கியம்” எனத் தெரிவித்தார்.