உ.பியில் நான் மாற்றம் கொண்டுவராமல் நிறுத்தமாட்டேன்; பிரியங்கா காந்தி காட்டம்

இந்த தேசத்தில் பாஜக தலைவர்களும், அவர்களின் கோடீஸ்வர நண்பர்களும்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள், மற்றவர்கள் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.


லக்கிம்பூர் கெரி கலவரத்தில் கொல்லப்பட்ட 4 விவாயிகளுக்கு நீதி கிடைக்கக் கோரி கிசான் நியாய் பேரணியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாரணாசி நகரில் நடத்தினார்.

அங்கு நடந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:
இன்று நவராத்ரியின் 4-வது நாள் நான் இன்று விரதம் இருக்கிறேன். மாகாதேவி ஸ்தூதி கூறி இந்த கூட்டத்தைத் தொடங்குகிறேன். இந்த நவராத்திரி நேரத்தில் என் ஆழ்மனதில் இருந்து நாங்கள் உங்களிடம் பேசுகிறேன்.


இந்த தேசம் பிரதமரின் சொத்தும் அல்ல, அவர்களின் அமைச்சர்களின் சொத்தும் அல்ல. இந்த தேசம் உங்களுடையது. நீங்கள் விழிப்பாக இல்லாவிட்டால் உங்களின் சொந்த தேசத்தை உங்களால் காப்பாற்ற முடியாது உங்களையும் காப்பாற்ற முடியாது. நீங்கள்தான் தேசத்தைக் கட்டமைத்தீர்கள்.


இந்த தேசம் நம்பிக்கையுள்ளது. விவசாயிகள் மக்களுக்கு உணவுகளை வழங்குகிறார்கள், விவசாயிகளின் மகன்கள் எல்லையைக் காக்கிறார்கள். ஆனால் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்படும்போது, அவர்கள் நீதிக்கோரி நம்பிக்கையை இழக்கிறார்கள்.


பல்வேறு நிகழ்ச்சிக்காக லக்னோ நகரம் வரை வந்த பிரதமர் மோடி, ஏன் லக்கிம்பூர் கெரிக்கு வந்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கூற அவருக்கு நேரமில்லை.


மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா சஸ்பெண்ட் செய்யப்படும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தனை நாள் முதல்வர் ஆதித்யநாத்தான் அவரை பாதுகாத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டாகப் போராடி வரும் விவசாயிகளை அழைத்துப் பேச பிரதமர் மோடிக்கு நேரமில்லை.

இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், தங்கள் நிலங்கள் பறிக்கப்படும் என விவசாயிகளுக்குத் தெரியும். மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்காகவே இந்த 3 வேளாண் சட்டங்களும் நடைமுறைக்குவந்தன.


போராட்டம்செய்பவர்களைதீவிரவாதிகள் என்றுயார் அழைத்தார்களோ அவர்களிடம் இருந்து நியாயத்தைப் பெறுங்கள். காங்கிரஸின் தொண்டர்கள் நாம், நாம் யாருக்கும் அஞ்சக்கூடாது. சிறையில் அடைக்கட்டும், தாக்கட்டும், நீதிக்காகப் போராடுவோம்.


மாற்றம் வேண்டுமென நினைத்தால் என்னுடன் வாருங்கள் ஒன்றாகப் போராடுவோம், அரசாங்கத்தை மாற்றுவோம். இங்கு நான் மாற்றம் கொண்டுவராமல் நான் நிறுத்தமாட்டேன்”
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

You may have missed