சீனா எதிர்த்தாலும் தைவானைக் கைவிடமாட்டோம்: எரியும்நெருப்பில் எண்ணெய் வார்த்த நான்சி பெலூசி

சீனா எதிர்த்தாலும் தைவானை அமெரிக்கா கைவிடாது. தைவான் சுயாட்சி நாடு என்ற கோஷத்தையும், எண்ணத்தையும் தைவானும் கைவிடாது என்று அமெரிக்க பிரிதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசி தெரிவித்துள்ளார்.

தைவானுக்கு நான்சி பெலூசி வருவதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து, நெருப்புபோன்ற வார்த்தைகளைக் கொட்டியது.

அமெரிக்கா-சீனா இடையிலான உறவு இன்னும் மோசமாகும் என்றெல்லாம் சீனா எச்சரித்தது.

இப்போது, தைவானை கொம்பு சீவிவிடுவதுபோலவும், தைவானின் சுயாட்சி உணர்வுகளை மேலும் உசுப்பேற்றும் விதமாக நான்சி பெலூசி பேசியுள்ளது எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல் இருக்கிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலூசி ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா சென்ற நான்சி பெலூசி அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு தைனாவுக்கு சென்றார்.

தைவான் சென்ற நான்சி பெலூசிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து உயர்ந்த பதவியில் இருப்போர் ஒருவர் வந்ததது இதுதான் முதல்முறையாகும்.

தைவானுக்கு நான்சி பெலூசி செல்வதற்கு முன் சீனா கடுமையாக எதிர்த்தது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தைவான் சிவப்புக் கம்பளம் விரித்து நான்சி பெலூசியை வரவேற்றது.

இதனால் ஆத்திரமடைந்த சீனா அரசு, சீனாவுக்கான அமெரிக்க தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது.

நெருப்புடன் விளையாடுகிறீர்கள், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சீனா எச்சரித்தது.

இந்நிலையில் நான்சி பெலூசி, அவருடன் வந்திருந்த எம்.பி.க்கள், ஆகியோர் தைவான் அதிபர் சாய் இங் வென்னுடன் உரையாடினர்.

அப்போது, நான்சி பெலூசி பேசுகையில் “தைவானை ஒருபோதும் அமெரிக்கா கைவிடாது. தைவானும் சுயாட்சி என்ற கொள்கையிலிருந்து நழுவாது.

சர்வாதிகாரம், ஜனநாயகம் என்ற இரு வாய்ப்புக்களுக்கு இடையே உலகம் இருந்து வருகிறது. ஜனநாயகத்தைக் காப்பதுதான் அமெரிக்காவின் தீர்மானம். தைவான் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகளிலும் ஜனநாயகத்தை காப்போம்.

தைவான் செல்லும் பாதைக்கு குறுக்கே சீனா இருக்கிறது. அதேநேரம், தைவானுக்கு யாரும் வருவதற்கும் நட்பு பாராட்டுவதற்கும் குறுக்கே சீனா நிற்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தைவானின் ராணுவத்துக்குதேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் “ என பெலூசி தெரிவித்தார்.