டூ வீலர் திருடும் கும்பல் கைது; உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸ்..!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடும் மூவர் கும்பலை கைது செய்தனர். போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து, நான்கு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (33). இவர், சென்னையில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இன்று அதிகாலை, கோயம்பேடுக்கு சென்றார்.

தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, காய்கறி வாங்கிவிட்டு வந்தார். அப்போது, அவரின் இரு சக்கர வாகனம் திருடுப்போயிருந்தது.

உடனடியாக ஜெயபிரகாஷ், கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, இரு சக்கர வாகனத்தை திருடிய மதுரவாயல், கன்னியம்மன் நகரை சேர்ந்த செல்வம் (37), சரவணன்(50), சின்ன நொளம்பூர், விக்னேஷ்வரா நகரை சேர்ந்த ஹரி (35) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மார்க்கெட் பகுதியில் தொடர் கைவரிசை காட்டியிருந்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து, நான்கு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.