படிக்கட்டில் தொங்காதே என கூறியதால் மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு கல்வீசிய இருவர் தப்பியோட்டம்

சென்னை, காசிமேடு பகுதியில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டித்த ஆத்திரத்தில், கல்வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
சென்னை, பிராட்வேயில் இருந்து மணலிக்கு தடம் எண் 56டி மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. தந்தையார் பேட்டையை சேர்ந்த சுரேஷ்(46) பேருந்தை ஒட்டி வந்தார்.
கொருக்குப்பேட்டை, கேவிகே சாமி தெருவை சேர்ந்த ரஜினி(42) என்பவர் நடத்துனராக இருந்தார். அப்போது அதில், 5 நபர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பேருந்தில் பயணம் செய்து வந்தனர்.
அவர்களை டிரைவர், நடத்துனர் ஆகியோர் கண்டித்தபடி வந்தனர். காசிமேடு, எஸ்.என்.ஷெட்டி தெரு வழியாக பேருந்து வந்தது.
அப்போது, படிக்கட்டில் தொங்கி வந்த இருவர், கல்லால் பேருந்தின் முன் பக்கம் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.
இது தொடர்பாக காசிமேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிசென்ற இருவரை தேடி வருகின்றனர்.