மெர்குரி சல்பைட்டை சாப்பிட்டு, மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சி..!

சென்னை, வேப்பேரி பகுதியில் விடுதி வார்டன் திட்டியதால், மெர்குரி சல்பைட்டை சாப்பிட்டு விட்டு, மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வேப்பேரியில் கால்நடை அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்த வளாகத்தில், மாணவிகளின் தங்கும் விடுதி செயல்படுகிறது.

இந்த கல்லூரியில், மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த மதி, வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் அஷ்மத் பாத்திமா ஆகிய இருவரும் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள்  இருவரும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு  இருவரும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன், மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் உள்ள மெர்குரி சல்பைட்டை  சாப்பிட்டனர்.

இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரையும் பார்த்து அங்கிருந்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், இருவரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில் பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை நடத்தினர்.அதில்,    

தற்கொலைக்கு முயன்ற இரு மாணவிகளும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் ஒரு மாதத்துக்கு முன்பு வெளியில் சென்றுவிட்டு விடுதிக்கு தாமதமாக வந்தனர்.

இதைப் பார்த்த விடுதி  வார்டன்கள், இருவரையும் கண்டித்து, எச்சரித்து அனுப்பினர்.

மேலும் விடுதி நிர்வாகம் சார்பில், இரு மாணவிகளின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது.

மாணவிகளின், பெற்றோர்கள், அவரை திட்டினர், இதனால், அவர்கள் இருவரும் விரக்தியில் இருந்தனர்.

அதைப்போன்று, சக மாணவிகளும், இவர்கள் குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.

இதன் விளைவாக, அவர்கள் இருவரும் மன உளைச்சலில், தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி வந்ததாக தெரிகிறது.

இதனால், அவர்கள் மெர்குரி சல்பைட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.