ரூ.25 ஆயிரம் கூலி வாங்கிக்கொண்டு கொள்ளையடித்த வழக்கில், இருவர் கைது; நேபாளி காவலாளியை பிடிக்க தீவிரம்

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ரூ.25 ஆயிரம் கூலி வாங்கிக்கொண்டு, இனிப்பு கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். நேபாளி காவலாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
   
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பிஷப் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பன்சிதர் குப்தா (48). தொழிலதிபரான இவர், கடந்த 14ம் தேதி அன்று, வழக்கம் போல் பாரிமுனையில் உள்ள தனது இனிப்பு கடைக்கு சென்றார்.

அதன் பின், குப்தாவின் தாயார் மஞ்சுவும் தனது மகனுடன் கடைக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், பன்சிதர் குப்தா அன்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது.

பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கமும், ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் காவலாளியாக வேலை செய்த நேபாளத்தை சேர்ந்த ராஜன் திபேந்திரா ஆஜி(20) என்பவர் மாயமாகி இருந்தார்.

இது குறித்து அவர், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் நேபாளத்தைச் சேர்ந்த கைலாஷ்(23), பாஜி தமாய் (27) ஆகிய இருவரை  கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும், தப்பியோடிய குப்தா வீட்டின் காவலாளி ராஜனின் நெருங்கிய நண்பர்கள் என தெரிந்தது.

இருவரும், ராஜனுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு கூலியாக ராஜன் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் கொடுத்தும், பணத்தை திருடிய உடன் ராஜன் நேபாளத்துக்கு தப்பியதும் தெரியவந்துள்ளது. ராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கபப்ட்டுள்ளது.