அக்டோபர் 1 முதல் டோக்கனைசேஷன் அமல்! கிரெடிட், டெபிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது. இதன் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் பயனாளிகள் பயன்படுத்த முடியும்.

டோக்கனைசேஷன் விதிமுறை அமலுக்கு வந்தபின், ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையதளங்கள் வாடிக்கையாளர்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது. அதற்குப்பதிலாக டோக்கன் வழங்கப்படும் அந்த டோக்கன் முறையால் பரிமாற்றம் செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள், சிவிவி எண்களை ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் சேமித்து வைத்திருந்தால், அதை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு டெபிட், கிரெடிட்கார்டு டோக்கனைஷேசன் விதிகள் கொண்டுவரப்பட்டது.

இந்தப் புதிய விதிகளை ஏற்க 2022, ஜனவரி 1ம் தேதி காலக்கெடு விதித்திருந்தது ரிசர்வ் வங்கி, பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கையையடுத்து, ஜூலை 1ம் தேதி நீட்டிக்கப்பட்டது.

டோக்கனைசேஷன் விதிகளை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று மேலும் 3 மாதங்கள் அவகாசம் அதாவது செப்டம்பர் 30ம் தேதிவரை அளிக்கப்பட்டது.

இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிந்ததையடுத்து நாளை முதல் டோக்கனைஷேசன் அமலுக்கு வருகிறது/

டோக்கனைசேஷன் என்றால் என்ன..?
டோக்கனைசேஷன் விதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்-லைனில் பொருட்கள், சேவைகள், பணப்பரிவர்த்தனை செய்யும்போது, தங்களின் கார்டுகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிவிக்காமல் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வதாகும்.

இந்த முறையில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைன் நிறுவனங்கள் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் ஆன்-லைன் நிறுவனங்கள் ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தாலும் அதையும் அழித்துவிட வேண்டும்.

அதாவது டெபிட், கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர் பெயர், பின், சிவிவி, வேலிடிட்டி காலம் என எதையும் சேமிக்கக்கூடாது.

எப்படி செயல்படும்?
ஆன்-லைன் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்கள் குறித்த எந்தவிவரங்களும் சேமிக்கப்படாது என்பதால், இனிமேல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருமுறை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போதும் கார்டு எண், வேலிடிட்டி, சிவிவி, பெயர் ஆகியவற்றை பதிவிட்டு பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

டோக்கனைசேஷன் நடைமுறைக்குவந்துவிட்டால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் உள்ள 16 இலக்கம் மறைக்கப்பட்டுவிடும்.

அதற்குப் பதிலாக ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனியாக டோக்கன் எண் ஒவ்வொருமுறை கார்டை பயன்படுத்தும்போது வழங்கப்படும் (அதாவது ஓடிபி எண் போன்று வழங்கப்படும்) இந்த டோக்கனை ஒருமுறை மட்டும், ஒரு ஆன்லைன்நிறுவனத்துக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

டோக்கனைசேஷன் பாதுகாப்பானதா..!
டோக்கனைசேஷன் நடைமுறைக்குவந்தவிட்டால், டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை ஆன்-லைன் வர்த்க நிறுவனங்கள் பார்க்கவோ, சேமிக்கவோ முடியாது.

பேமெண்ட் முறையும் மிகவும் பாதுகாப்பானதாக அமையும். மிக அதிகமாக பணமோ அல்லது பரிமாற்றமோ செய்யும்போது மிகவும் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்யலாம்.

டோக்கன்களைன் ஆன்-லைன்பரிமாற்றம், மொபைல் பாயின்ட்ஆப் சேல் பரிமாற்றம், ஆப்ஸ் மூலம் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்த முடியும். இந்த டோக்கனில் எந்தவிதமான தனிப்பட்ட விவரங்களும் இருக்காது, இந்த டோக்கன் மாறிக்கொண்டே இருக்கும்.

டோக்கனைசேஷன் கட்டாயமா?
அக்டோபர் 1ம் தேதி முதல் டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்பவோர் டோக்கனைசேஷன் செய்வது கட்டாயம்.

ஆன்-லைன்வர்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், சிவிவி, எக்ஸ்பயரி ஆண்டு ஆகியவற்றை நீக்கிவிட வேண்டும்.

பயனாளிகள் ஆன்லைன் தளத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்கி பணம் செலுத்தும்முன், டோக்கனை உருவாக்க வேண்டும், அந்த டோக்கனை குறிப்பிட்ட இணையதளத்தில் எதிர்கால பயன்பாட்டுக்காக சேமித்தும் வைக்கலாம்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் செயல்முறை கட்டாயமில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளை ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் டோக்கனைஸ் செய்ய அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை தேர்வு செய்யலாம்.

டோக்கனைஷேசன் செய்யாவிட்டால், ஒவ்வொருமுறை பொருட்கள் வாங்கும்போதும் வாடிக்கையாளர்கள் தங்களின் கார்டின் 16 இலக்க எண், எக்ஸ்பயரி தேதி, சிவிவி ஆகியவற்றை பதிவுசெய்ய வேண்டும்.

ஆனால், டோக்கனைஸ் செய்துவிட்டால், அந்த டோக்கன் எண்ணை ஆன்லைன் வர்த்தக தளங்களான பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா ஆகியவற்றில் எதிர்காலப் பயன்பாட்டுக்காக சேமிக்கலாம்.

ஒவ்வொரு ஆன் லைன் நிறுவனத்துக்கும் டோக்கன் எண் மாறும். ஒரு ஆன்லைன் நிறுவனத்துக்கான டோக்கனை மற்றொரு நிறுவனத்தில் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக அமேசானுக்கு வழங்கப்பட்ட டோக்கனை பிளிப்கார்டில் பயன்படுத்த முடியாது.

டோக்கன் உருவாக்க கட்டணமா..!
டோக்கன் உருவாக்க டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

டோக்கனைசேஷன் உள்நாட்டு கார்டுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். சர்வதேச கிரெடிட் கார்டுகளுக்குப் பொருந்தாது.