திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இனி ஈஸி! புதிய மொபைல் செயலி அறிமுகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் முன்பதிவு, தங்குமிடம் முன்பதிவு உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வசதிகளுக்காக திருப்தி தேவஸ்தானம் புதிய செயலி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம் இணைந்து க்ளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலிமூலம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம், ஆர்ஜித சேவை, தங்குமிடம் முன்பதிவு, நேரடி ஒளிபரப்பு, இ-உண்டியலில் காணிக்கைவழங்கலாம். இன்னும் இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.
திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி, இந்த செயலியை நேற்று முறைப்படி வெளியிட்டார்.
திருப்பதி அன்னமய்யா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி பேசுகையில் “இந்த புதிய செயலி மூலம் பக்தர்கள் சாமி தரிசன முன்பதிவு, தங்குமிட முன்பதிவு, இஉண்டியல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறலாம்.
பக்தர்களின் வசதிக்காக முதல்தரமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
திருப்பதி கோயில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி கூறுகையில் “இந்த செயலி பக்தர்களுக்கு டிஜிட்டல் நுழைவுவாயிலாக இருக்கும்.
கடந்த 2 ஆண்டுகளாக ஜியோ குழுமத்திடம் இணைந்து இந்த செயலியை முதல்தரமாக உருவாக்கியுள்ளோம். இந்த செயலியை பயன்படுத்துவதில் யாருக்கும் எந்தி சிரமமும் இருக்காது, பல்வேறு வசதிகள் உள்ளன.
திருமலையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரலையில் பார்த்து ரசிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த மொபைல் செயலியில் திருப்பதியில் நடக்கும் நிகழ்ச்சிகள், வீடியோக்கள், ரிங்டோன்கள், வால்பேப்பர், எதைச் செய்யலாம் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தரப்பட்டுள்ளன.
பக்தர்கள் நேரடியாக வந்து திருப்பதி உண்டியலில் காணிக்கை செலுத்த முடியாதவர்கள், ஏழுமலையானை நினைத்து இ-உண்டியலில் ஆன்லைன் பேமெண்ட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.