கஞ்சா கடத்துவதாக கூறி மிரட்டல்; போலீசார் போல் நடித்து ரூ.29 லட்சம் வழிப்பறி..!

சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் கஞ்சா கடத்துவதாக கூறி மிரட்டல் விடுத்து, போலீஸ் போல் நடித்து, 29 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தனர்.

சென்னை, எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் நசீர்கான்.

இவர் அண்ணா சாலையில் வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நசீர்கான் நிறுவனத்தில் அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26), கமலக்கண்ணன் (25) ஆகிய இருவர் வேலை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நசீர்கான், வியாழக்கிழமை இருவரிடமும் ரூ.29 லட்சத்தை கொடுத்து, சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் தனது நண்பர் முகம்மது ஷேக்கிடம் வழங்கும்படி அனுப்பி வைத்தார்.

இருவரும், பைக்கில்  சேத்துப்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

அவர்கள்,சேத்துப்பட்டு குருசாமி பாலத்திடம் செல்லும்போது அங்கு இரு பைக்கில் வந்த 4  மர்ம நபர்கள், இருவரையும் வழிமறித்து நிறுத்தினர்.

மேலும் மர்ம நபர்கள், தங்களை போலீசார்  கூறிக் கொண்டு இருவரும் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட சந்தோஷ்குமாரும், கமலக்கண்ணனும் தாங்கள் கஞ்சா கடத்தி வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

உடனே அந்த மர்ம நபர்கள், இருவரும் வைத்திருந்த பையையும், இருவரது விலை உயர்ந்த கைப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த பையில்தான் ரூ.29 லட்சம் இருந்ததாக புகாரில் இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக போலீசார் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.