கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்… 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு..

வேட்புமனு தாக்கல் (கோப்புப்படம்)

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களில் 13 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் மற்றும் பலர் என மொத்தம் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

பொன். ராதா கிருஷ்ணன்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 234 தொகுதிகளில் மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நேற்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்களில் 13 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 3,663 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 2,171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தேர்தல்

சென்னை, வில்லிவாக்கம், துறைமுகம், எடப்பாடி, அறவக்குறிச்சி மற்றும் கோவை தெற்கு உள்பட சுமார் 30 தொகுதிகளுக்கான இறுதி பட்டியல் தோதல் ஆணையத்தின் அதிகார பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே எத்தனை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பான இறுதி நிலவரம் இன்று மதியத்துக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.