இளம் பெண்களுக்காக! நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியாக செலவிட இதைவிட 7 சிறந்த வழிகள் இருக்காது

ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. அது சம்பாத்தியமாகட்டும், வீட்டு நிர்வாகம், அலுவலக நிர்வாகம் என அனைத்திலும் ஆண்களுக்கு நிகர் என்று பெண்கள் தங்களை நிரூபிக்கிறார்கள்.

நிதிச்சூழலிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம்பாதிப்பதால், பணரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களையும், குடும்பத்தையும் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்.

அவ்வாறு சம்பாதிக்கும் பெண்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை கவனமாக வைத்திருப்பதும், முதலீடு செய்வதும், நிர்வகிப்பதும் அவசியம். அதற்கு 7 சிறந்த வழிமுறைகள் உள்ளன.

பட்ஜெட் உருவாக்குங்கள்:
வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள் தங்களுடைய வரவு, செலவு ஆகியவற்றை பட்டியலிட்டுசெலவிடுங்கள்.

வீட்டுச் செலவு, குடும்பச் செலவு, இதர செலவுகளுக்கு ஒதுக்கீடு ஆகிவற்றை தீர்மானியுங்கள்.

எந்தச் செலவை முதலில் செலவிட வேண்டும், எதற்கு முன்னுரிமை என்று பட்டியலிட்டு செலவிடலாம். குறுகியகால, நீண்டகால இலக்கு நிர்ணயித்து அதன்படி பணத்தை சேமிக்கலாம்.

இலக்குடன் செயல்படுதல்:
நிதிரீதியான இலக்கு இருத்தல் அவசியம். குறுகியகால இலக்கு, நீண்டகால இலக்கு இருப்பது தேவை.

குறுகியகால இலக்கு ஓர் ஆண்டுக்குள் நிறைவேறும், நீண்டகால இலக்கிற்காக பலஆண்டுகள் உழைக்க வேண்டும்.

உங்கள் இலக்கு நிறைவேறக்கூடியதாக, எட்டக்கூடியதாக இருக்க வேண்டும். சரியான பட்ஜெட், இலக்கை தீர்மானித்து நடக்க வேண்டும்.

கடனைச் செலுத்துதல்:
கடன் என்பது மிகப்பெரிய நிதிச்சுமை. நம்முடைய நிதிஇலக்கை அடையவிடாமல், எதிர்காலத்துக்கு சேமிக்க விடாமல், பட்ஜெட் போடவிடாமல் தடுக்கும் தடைக்கல் கடன்.

ஆதலால், கடன் ஏதும் இருந்தால் அதைத் தீவிரமாகக் கருதி, அதை விரைவாக திருப்பிச்செலுத்த திட்டமிட வேண்டும்.

கடனைத் தவிர்த்தல் என்பது நிதித்திட்டத்தை சிறப்பாகச்செயல்படுத்த உதவும். அதிகமான கடன் இருத்தலும், வாங்குதலும் நிதிநிலை, உடல்நிலை, மனநிலையை பாதிக்கும்.

முதலீட்டை தொடங்குங்கள்:
பெண்கள் இளம் வயதில் சம்பாதிக்கத் தொடங்கும்போதே முதலீட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நீண்டகால பலன்களை மனதில் வைத்து காப்பீட்டில் முதலீடு செய்தல் வேண்டும்.

நீண்டகால இலக்கோடு முதலீடு செய்யும்போது, கற்பனை செய்யமுடியாத அளவு பலனை எதிர்பார்க்கலாம். ஆதலால், முதலீடு என்பது பெண்களுக்கு அவசியமானது.

அவசரகால நிதி:
எதிர்பாராத சூழல், அசாதாரண நிலை, தவிர்க்க முடியாத சூழலைச் சமாளிக்க பெண்கள் பணத்தை தனியாக சேமிப்பது நல்லது.

உங்கள் செலவில் 6 மாதச் செலவை அவசரக்காலத்துக்காக சேமித்தல் வேண்டும். பெண்கள் செலவிடுதலில் ஒரு பகுதியை அவசரகால நிதிக்காக சேமித்தல் வேண்டும்.

அதிகமான தொகையை மாதந்தோறும் ஒதுக்காவிட்டாலும் குறைந்த அளவு பணத்தையாவது அவசர செலவை எதிர்கொள்ள ஒதுக்கலாம்.

காப்பீடு வாங்கலாம்:
பெண்கள் தங்கள் சம்பாதிப்பதில் முதலீடு செய்தல் எவ்வளவு அவசியமோ அதேபோல காப்பீடு எடுத்தலும் முக்கியம்.

பல்வேறு விதமான உடல்ரீதியான சிக்கல்களை சந்திக்கும்போது அதை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீடு, வாழ்நாள் காப்பீடு எடுத்தல் அவசியம்.

வேலைக்குச்செல்லும் ஒவ்வொரு பெண்ணும் காப்பீடு செய்திருத்தலை உறுதி செய்ய வேண்டும். அதிலும் குறைந்த வயதிலேயே காப்பீடு எடுத்தல் என்பது மிகவும் அவசியமானது.

ஓய்வு காலத்துக்கான சேமிப்பு:
ஓய்வுகாலத் திட்டமிடல் என்பது வாழ்வின் இலக்கில் முக்கியமானது. சேமித்தலும், செலவிடுதலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே மாறுபடும்.

ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் தங்களையும் குடும்பத்தையும் கவனிக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஆதலால், ஆண்களைவிட சற்று கூடுதல் பொறுப்புடன் பெண்கள் ஓய்வுகாலத்திட்டமிடல் செய்வது அவசியம்.

சம்பாதிக்கும் காலத்திலேயே ஓய்வுகாலத் திட்டமிடலுக்கான பணத்தை சேமித்தல் வேண்டும். விரைவாக சேமிக்கத் தொடங்கினால், உங்கள் பணத்துக்கான மதிப்பு அதிகரிக்கும்.