ஆர்சிபி அணியின் அழைப்பால் திருமணத்தை தள்ளிவைத்த இளம் வீரர்: வெளியான தகவல்

ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியில் இடம் கிடைக்காமல் ஏலத்தில் ஒதுக்கப்பட்ட வீரர், திடீரென்று அழைக்கப்பட்டதால், தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார்.

அந்த வீரர் வேறு யாருமில்லை, எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ரஜத் பட்டிதார்தான்.

உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிதாகப் பார்க்கப்படும் ஐபிஎல் டி20 தொடரில் சதம் அடிப்பது பெரிய சாதனை, அதைவிட எலிமினேட்டர் சுற்றில் சதம் விளாசுவது என்றும் நினைவில் இருக்கும்.

ரஜத் பட்டிதாரின் காட்டடி ஆட்டத்தால்தான் ஆர்சிபி அணி எளிதாக குவாலிஃபயர்-2 சுற்றுக்குள் செல்ல முடிந்தது.

இறுதி ஆட்டத்துக்கான குவாலிபயர் சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது ஆர்சிபி அணி.

கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ரஜத் பட்டிதார் இடம் பெற்றார். ஆனால், 4 போட்டிகளில் வெறும் 71 ரன்கள் சேர்த்திருந்ததால் அவரை மெகா ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

ஆனால், ஏலத்துக்குப்பின், ஆர்சிபி வீரர் லுவ்னித் சிசோடியாவுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவருக்குப் பதிலாக ரூ.20 லட்சத்துக்கு பட்டிதார் மீண்டும் ஆர்சிபி அணிக்குள் அழைக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 3ம் தேதிதான் அணிக்குள் பட்டிதார் வந்தார்.
உண்மையில் பட்டிதாருக்கு மே 9ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது. ஆர்சிபி அணிக்குள் திரும்ப வந்ததால் தனது திருமணத்தை பட்டிதார் தள்ளிவைத்துவிட்டார்.

ரஜத் பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “மே 9ம் தேதி ரஜத் பட்டிதாருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தூரில் முக்கியமானவர்கள் அழைப்புடன் ஹோட்டலில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஆர்சிபி அணிக்கு மீண்டும் அவரை அழைத்ததால், திருமணத்தை ஜூலை மாதம் தள்ளிவைத்தோம்.

ரஞ்சிக் கோப்பைப் போட்டியிலும் பட்டிதார் விளையாடி மத்தியப்பிரதேச அணியை நாக்அவுட் சுற்றுவை கொண்டுவந்துவிட்டார்.

வரும் ஜூன் 6ம் தேதி காலிறுதியில் பஞ்சாப் அணியை எதிர்த்துமத்தியப்பிரதேசம் மோதுகிறது.

திருமணத்துக்கான அழைப்பிதல்கள் ஏதும் அச்சிடவில்லை. ஹோட்டல் மட்டுமே முன்பதிவு செய்திருந்தோம்.

ஆர்சிபிஅணியிலும், ரஞ்சி அணியிலும் விளையாட இருப்பதால் திருமணத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்துவிட்டோம்”எ னத் தெரிவித்தார்.

ஆர்சிபி அணியில் இந்த சீசனில் பட்டிதாருக்கு ஒன்டவுனில் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணிக்காக இதுவரை 7 ஆட்டங்களில் 275 ரன்கள் குவித்துள்ளார் பட்டிதார், ஸ்ட்ரைக் ரேட் 156 ஆக இருக்கிறது.

ஐபில் நாக்அவுட் சுற்றில் அன்கேப்டு வீரர் ஒருவர் சதம் அடித்தது இதுதான் முதல்முறையாகும்.