மாநில கல்லூரி ஆண்டு விழாவின்போது பழமையான வேப்பமரம் சாய்ந்தது; பெண் உட்பட நால்வர் சிக்கினர்

சென்னை, மெரினா கடற்கரை சாலையில் மாநில கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நேற்று  ஆண்டு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கல்லூரியின் மைதானத்தையொட்டி கேன்டீன் அருகே இருந்த பழமையான வேப்ப மரம் ஒன்று, திடீரென அடியோடு பெயர்ந்து விழுந்தது. அப்போது அங்கு நின்றிருந்த நால்வர், மரத்தின் அடியில் எதிர்பாராதவிதமாக  சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, தகவல் கிடைத்து எழும்பூர், மயிலாப்பூர் பகுதியில் இருந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மரத்துக்கு அடியில் சிக்கிய  நால்வரையும் மீட்டனர்.

இதில் நந்தகுமார் (55) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த சிட்டி பாபு,59. கிருஷ்ணமூர்த்தி (58) மற்றும் தமிழரசி (50) ஆகியோரும் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைககாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய நால்வரும்,   மாநில கல்லூரியில் வேலைப்பார்ப்பவர்கள் என தெரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடியோடு பெயர்ந்த  மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.