வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்; மொபட்டையும் திருடி சென்றனர்..!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், மொபட்டையும் திருடி சென்றனர்.

சென்னை, வில்லிவாக்கம்,  நாகேஸ்வரா காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (63). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான இவர், கடந்த 2ம் தேதி அன்று வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

அங்கிருந்து ஸ்ரீதரன், ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 5 சவரன் தங்கநகை, இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட்டையும் திருடர்கள் ஓட்டிச் சென்றிருப்பது ஸ்ரீதரனுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார்  வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.