பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24ம் ஆண்டு ஜிடிபி 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்

2023-24ம் ஆண்டில் நாட்டின் பொருளாதர வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்நாளான இன்று இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் வரும் நிதியாண்டுக்கான ஜிடிபி 6.5 சதவீதமாகவே இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ச்சிக் குறைவாகும். ஆனால் பெயரளவு வளர்ச்சி 11 சதவீதமாக அடுத்தநிதியாண்டு இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மற்ற நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு வலுவாக இருக்கும், தனியார் நுகர்வு நிலையாக இருக்கும், வங்கிக்கடன் வழங்குவது அதிகரிக்கும், மூலதனச் செலவு அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கொரனா பரவல் பாதிப்பு, ரஷ்யா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி வட்டிவீத உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் பொருளாதார வளர்ச்சி நெருக்கடிக்குள்ளாகி இருந்தது.

இதைக் கடந்து அடுத்த ஆண்டு பொருளதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

2022-23ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறி பணவீக்கம் இருந்தது, அதாவது சராசரியாக 6.8 சதவீதம் இருந்தது பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படும்.

ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்தியதால் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவுக்குள்ளாது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படலாம்.

இந்தியாவின் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரித்துள்ளதால், நடப்புக் கணக்குப்பற்றாக்குறையை உயர்ந்தே இருக்கிறது.

உலகளவில் பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் ஏற்றுமதியும் குறைந்துள்ளது எனக் குறிப்பிடப்படலாம்.

ஜூலை-செப்டம்பர் 2வது காலாண்டில் ஜிடிபியில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக இருந்தது, இது கடந்த ஆண்டில் இருந்ததைவிட 2.2 ச தவீதம் அதிகம். நடப்புக் கணக்குப் பற்றாக்கு உயர்வு குறித்து குறிப்பிடப்படலாம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தாலும்கூட, உலகளவில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இருக்கிறது.

கடந்த 2021 நிதியாண்டில் 7 சதவீதமாக இருந்த ஜிடிபி நடப்பு ஆண்டில் குறைந்தது.

இந்தியாவில் நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது, அதேசமயம் தனியார் துறையில் இருந்து அதிகமாக வேலைவாய்ப்பு உருவாக வேண்டும் என்பதையும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படலாம்.