சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணியன் சாமி

தமிழகத்தில் ஆட்சியை கலைப்பேன் என்று எச்சரித்த சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் பள்ளி நிர்வாகத்திடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க. சுப்பிரமணிய சாமி கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவிக்கையில், பி.எஸ்.பி.பி. பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அதற்காக திக மற்றும் திமுக ஆதரவாளர்கள் பள்ளி நிர்வாகிகளைத் தாக்குகின்றனர்.

திமுக

அந்தக் குண்டர்களை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தாவிட்டால் பி.எஸ்.பி.பி. பள்ளியை நான் பாதுகாப்பேன் என தெரிவித்து இருந்தார். மேலும், இதையடுத்து பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி, ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசால் பிராணமர்கள் சமூகம் அச்சத்தில் இருக்கிறது. ஆகவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் அனுப்பினார். பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு நடந்து கொண்டால், தமிழக அரசையே கலைத்துவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பத்மா சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை கலைப்பேன் என்று எச்சரித்த சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது சுப்பிரமணியன் சாமிக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.