உதவ தயார்.. ஆனால் எங்களுக்கு தேவை அதிகம். எங்க ஆக்சிஜனை எங்களுக்கு கொடுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய பழனிசாமி

ஆக்சிஜன் பயன்படுத்தும் நோயாளி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் ஒரு லட்சத்திற்கும் மேலாக உள்ளதால் தினசரி ஆக்சிஜன் தேவை அதிகரிக்கிறது எனவே ஸ்ரீபெரும்புத்தூர் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. அதிகளவு ஆக்சிஜன் தேவையான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும், மாநிலத்தின் வளர்ந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவைகள் குறித்து உங்கள் அன்பான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

எடப்பாடி பழனிசாமி

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றை குறைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 டன் என்று இருக்கும் நிலையில் விரைவில் 450 டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை வரலாம். 2020 ஆம் ஆண்டில் முந்தைய கொரோனா பரவலின் போது போது அதிகபட்சமாக 58,000ஆக இருந்த தொற்று எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, ​தற்போது தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது மேலே குறிப்பிட்ட படி ஆக்ஸிஜன் தேவையை அதிகரித்துள்ளது. தடையற்ற மற்றும் போதுமான ஆக்ஸிஜன் விநியோகத்தை வழங்க அனைத்து முயற்சிகளும் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆக்சிஜன் சிலிண்டர்கள்

இந்த பிரச்சினையில், பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) தரவுப்படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் மட்டுமே என்கிற அளவைத் தாண்டி ஆக்ஸிஜன் நுகர்வு 310 மெட்ரிக் டன் என்கிற அளவை எட்டியுள்ளது. மேலும், ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் எங்களை விட குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்று எண்ணிக்கை உள்ளன.

மேலும் பெரிய எஃகு தொழிற்சாலைகள் அந்தந்த மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு அருகில் உள்ளன. ஆனால், தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய அளவிலான தொற்று பாதிப்புகளுடன் உள்ள சென்னை நகரத்திற்கு ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்படவில்லை.

பிரதமர் மோடி

இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். தமிழகம் இது வரை ஆக்சிஜன் செல்வதை தடுக்க எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை, மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தேவைக்கு உதவ எப்போதும் தயாராக இருந்தாலும், தமிழகத்தின் தேவை மிக அதிகமாக இருக்கும் போது ஆக்ஸிஜனை கட்டாயமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது, சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.