சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களுக்கும் பரவ திமுக அரசுதான் காரணம்.. பா.ஜ.க.

பா.ஜ.க.

சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களுக்கும் பரவ திமுக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிற மாவட்டங்களில் பரவிய கொரோனா பரவலுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே காரணம். ஒரே நாளில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து, பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களுக்கும் பரவ வழி வகுத்து விட்டனர்.

எல்.முருகன்

மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை. இருப்பினும் மத்திய அரசு மாநில அரசுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்த போது அதனை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் இன்று தடுப்பூசி பற்றாக்குறை என்று விமர்சனம் செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. முழு ஊரடங்கால் மக்கள் சிரமப்பட கூடாது என்பதற்காக, கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் அனைத்து கடைகளும் திறக்கவும், மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து வசதியும் செய்யப்பட்டது. இதனால் அந்த 2 தினங்களும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக பயணித்தனர்.