மிகச்சிறந்த ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்தான்; டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யுங்க: தோனியை மறைமுகமாக குத்திய ஹர்பஜன் சிங்

சீனியர் வீரராக இருந்தாலும் இவரின் ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் பார்க்கும்போது, டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது.

இதன் மூலம் ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பு கடினமாகிக்கொண்டே வருகிறது. இந்த சீசனில் ஆர்சிபி அணியில் விராட் கோலி ஃபார்மிலேயே இல்லை, டூப்பிளசிஸ் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை, நடுவரிசை பேட்டிங் பலமில்லை என பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் சில சாதகமான அம்சங்களும் உள்ளன.

குறிப்பாக இலங்கை வீரர் ஹசரங்கா 12 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், பல போட்டிகளில் ஒன்மேன் ஆர்மியாக இருந்து ஸ்கோரை உயர்த்துவதிலும், வெற்றி தேடித்தருவதிலும்ஒரு வீரர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதுதான் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இரு அம்சங்கள் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த சீசனில் ஆர்சிபி அணியில் அதிக ரன்கள் சேர்த்த வகையில் தினேஷ் கார்த்திக் 2-வது இடத்தில் இருக்கிறார்.

13 போட்டிகளில் 285 ரன்கள் குவித்துள்ள தினேஷ் கார்த்திஸ், சராசரி 57ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 192 ஆகவும் இருக்கிறது. சிறந்த பினிஷராக, விக்கெட் கீப்பராகவலம் வரும் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டி20போட்டியில் சிறந்த ஃபினிஷர் சிஎஸ்கே கேப்டன் தோனி என்று பேசப்பட்டு வரும் நிலையில் சிறந்த பினிஷர் தினேஷ் கார்த்திக் தான் என்று தோனியையும் ஹர்பஜன்சிங் மறைமுகமாக குத்திக்காட்டியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங் பேசியதாவது: ஆர்சிபி அணிக்காக தினேஷ் கார்த்திக் பேட்டிங் அற்புதமாக இருக்கிறது. ஆஃப் சைடைவிட லெக்சைடில் அற்புதமான ஷாட்களை ஆடுகிறார்கள், சிங்கில் ரன்களை அற்புதமாக ஓடி எடுக்கிறார்.

நான் நினைக்கிறேன், டி20 விளையாட்டைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார். எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து விடுகிறார்.

என்னைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் சீசனில் மிகச்சிறந்த பினிஷர் என்றால் தினேஷ் கார்த்திக்தான். மற்றவர்கள் யாருமில்லை.

நான் மட்டும் தேர்வுக்குழுவில் இருந்தால், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் தினேஷ்க் கார்த்திக்கை தேர்வு செய்வேன்.

இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடும் தகுதி தினேஷ் கார்த்திக்கிற்கு இருக்கிறது. இந்திய அணிக்கு சிறந்த ஃபினிஷர் தேவை, அது தினேஷ்க் காரத்திக், ஹர்திக் பாண்டியாவை சேர்க்கும்போதுதான் அணி வலுவடையும்.

எதிர்காலம் பற்றிநான் ஆழமாகப் பேசுகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த ஐபிஎல் சீசன் தினேஷ் கார்த்திக்கிற்கு அற்புதமாக இருக்கிறது.

அவரை ஆர்சிபி அணியில் முன்வரிசையில் களமிறக்கினால் நன்றாக இருக்கும். 15 முதல் 16 ஓவரில் அவரை களமிறக்கினாலே போதும் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து விடுவார்.
இவ்வாரு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.