விழுந்து நொறுங்கிய விமானம்: ‘டார்ஜான்’ நடிகர் பரிதாப பலி: மனைவியும் மரணித்த சோகம்

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணம், ரூதர்போர்டு வட்டம் ஸ்மைர்னா நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிறிய ரக ஜெட் விமானம் கடந்த 29-ம் தேதி புளோரிடா மாகாணம் பாம் பீச் பகுதிக்கு புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நாஷ்வில்லே நகருக்கு அருகே உள்ள பெர்சி பிரீஸ்ட் ஏரியில் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் டார்ஜான் நடிகர் ஜோ லாரா, அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் உட்பட 7 பேர் பயணம் செய்ததாக விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து ரூதர்போர்டு நகர தீ மற்றும் மீட்புப் படை முகநூல் பக்கத்தில் நேற்று “ஏரியில் விழுந்த விமானத்தை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் விமானத்தின் சில பாகங்கள் கிடைத்துள்ளன. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அதே நேரம், விமானத்தில் பயணித்த 7 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என கூறப்பட்டுள்ளது.

1989-ல் வெளியான ‘டார்ஜான் இன் மன்ஹாட்டன்’ என்ற தொலைக் காட்சி திரைப்படத்தில் டார்ஜானாக லாரா நடித்தார். பின்னர் 1996-97-ல் ஒளிபரப்பான ‘டார்ஜான்: தி எபிக் அட்வென்ச்சர்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் லாரா நடித்துள்ளார்.