வந்துட்டேனு சொல்லு .. தினேஷ் கேப்டன்ஷிப்பில் 2-வது முறையாக பைனலில் தமிழக அணி

அரைசதம் அடித்த தமிழக வீரர் அருண் கார்த்திக்


அகமதாபாத்தில் நடந்த முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கு இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி.


முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் 3 வி்க்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினேஷ் கார்த்தி்க் கேப்டன்ஷிப்பில் தமிழக அணி முஷ்டாக் அலி கோப்பையில் தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், அருண் கார்த்திக்கும் 4-வதுவிக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் அருண் கார்த்திக் 54 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து(3 சிக்ஸர், 9பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார், தினேஷ் கார்த்திக் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழக அணியில் திண்டுகல்லைச் சேர்ந்த எம். முகம்மது, 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.


ராஜஸ்தான் அணி கேப்டன் அசோக் மனேரியா 51 ரன்கள், அஜித் குப்தா 45, ஆதித்யா கர்வால் 29 ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை சொதப்பினர்.


120 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 34 ரன்களுக்குள் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் குறிப்பாக 19-வது ஓவரில் மட்டும் முகமது வீசிய ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன.


20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. தமிழக அணி தரப்பில் முகமது 4 விக்கெட்டுகலையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.


155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி ொத தொடக்கத்திலேயே ஹரிநிசாந்த்(4), பாபா அபராஜித்(2) விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


3-வது விக்ெகட்டுக்கு ஜெகதீசன்,அருண் கார்த்திக் ஜோடி ஓரளவுக்கு நிலைத்து ஆடினாலும், நம்பிக்கை ஜெகதீசன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வதுவிக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.


4-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், அருண் கார்த்திக்குடன் சேர்ந்து நிதானமாக ஆடி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அருண் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த அருண் காரத்திக் 9பவுண்டரி, 3சிக்ஸர் உள்ளிட்ட 89 ரன்கள்சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்


தமிழக அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.