பாகிஸ்தான் டி20 வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு: தேசவிரோத கோஷமிட்ட 6 பேர் கைது

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வென்றதை கொண்டாடிய காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு எதிராக தேசவிரோத கோஷமிட்டு வீடியோவில் கண்டறியப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயில் நேற்றுமுன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.


பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டுமக்கள் கொண்டாடினார்கள். ஆனால், அதை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஷெர் ஐ காஷ்மீர் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினர்.


இது தொடர்பாக வீடியோ காட்சிகளை சிலர் எடுத்து, காஷ்மீர் போலீல் ஐஜி விஜய் குமாருக்கு அனுப்பினர். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியது மட்டுமின்றி,இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர சம்பா மாவட்டத்தில் ஒரு கூட்டத்தினர் சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான் போட்டியைப் பார்த்தனர்.

அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் கொண்டாடிய அந்த கூட்டத்தினர், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பான வீடியோ காட்சியும் போலீஸாருக்கு கிடைத்தது. சமூக ஊடகங்களிலும் பரவி வைரலானது. இதையடுத்து, அந்த வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸ் துணை ஆணையர் அனுராதா குப்தா உறுதி செய்துள்ளார்.
சம்பா நகர போலீஸ் எஸ்எஸ்பி ராஜேஷ் சர்மாகூறுைகயில், “இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டது தொடர்பாக சிலரிடம் விசாரித்து வருகிறோம்.

இன்னும் அதிகமானவர்களை விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம்”என த் தெரிவித்தார்.