பாகிஸ்தானின் வெற்றி இந்தியாவுக்கு நல்லது: நியூஸிலாந்து வெல்வது கோலி படைக்குச் சிக்கல்: ஆகாஷ் சோப்ரா கணிப்பு

ஷார்ஜாவில் இன்று நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப்-2 பிரிவில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெல்வதுதான் இந்திய அணிக்கு நல்லது. ஒருவேளே நியூஸிலாந்து வென்றுவிட்டால் கோலிப்படைக்கு சிக்கலாக முடிந்துவிடும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.


டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்று 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்திய அணி தோல்வி அடைந்து மைனஸ் ரன்ரேட்டில் இருக்கிறது.
இந்நிலையில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெல்வதுதான் இந்திய அணிக்கு நல்லது. இல்லாவிட்டால், கோலிப்படை அரையிறுதிக்குள் செல்வதற்கு கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.


அதாவது இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை நியூஸிலாந்தை வெல்லும் பட்சத்தில், நியூஸிலாந்து 2 புள்ளிகள் பெற்றுவிடும். மீதமுள்ள ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா அணிகளை வெல்வது பாகிஸ்தானுக்கும், நியூஸிலாந்துக்கும் பெரிதாக சிரமம் இருக்காது.


அதேநேரம், நியூஸிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி மற்ற 3 கத்துக்குட்டி அணிகளையும் வெல்லும் பட்சத்தில் இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் சமமான புள்ளிகள் பெறும், நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் இருஅணிகள் அரையிறுதிக்குச் செல்லும்.

இதுபோன்ற கடினமான சூழல் வராமல் தவிர்க்க இன்றைய நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அவ்வாறு வென்றுவிட்டால், இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமே நாக்அவுட் சுற்றுபோன்று அமைந்துவிடம்.

எந்த அணி தோற்கிறதோ அந்த அணி தொடரிலிருந்து வெளியேறிவிடும். ஆதலால், நிகர ரன்ரேட்டில் இந்திய அணி சிக்காமல் இருக்க நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் வெல்வதுதான் சிறந்தது.


ஆனால், ஐசிசி தொடர்பான போட்டிகளில் நியூஸிலாந்துக்குஎதிராக கடந்தகால வரலாற்றில் இந்திய அணி மோசமான ரெக்கார்டை வைத்திருப்பதால் வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.


இதை கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:


என்னைப் பொறுத்தவரை நியூஸிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வெல்வதுதான் இந்திய அணிக்கு சாதமாக அமையும். ஒருவேளை பாகிஸ்தான் அணியை நியூஸிலாந்து வென்றால், நியூஸிலாந்தை இந்திய அணி வென்றால், 3 அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் நிகர ரன்ரேட்டில் சிக்கிக் கொள்ளும்.

மற்ற 3 அணிகளை வெல்லும் என்ற ஊகத்துடன் இந்த கணக்கீடு முன்வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் நியூஸிலாந்து அணியை வென்றுவிட்டால், ஆப்கானிஸ்தான் தவிர்த்து நமிபியா, ஸ்காட்லாந்து அணிகள் மட்டுமே இருக்கும், இவற்றை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு பாகிஸ்தான் முன்னேறிவிடும்.


பாகிஸ்தான் அணி தற்போது வலிமையாக இருக்கிறது. அந்த அணியின் டாப் 3 வீரர்கள் எந்த போட்டியிலும் எந்தச் சூழலிலும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். குறிப்பாக ஹபீஸ், ஷோயிப் மாலிக் போன்றோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள்.

பந்துவீச்சிலும் இருவரும் நன்றாக செயல்படக்கூடியவர்கள்.
பாகிஸ்தானுக்கு பயணம் செய்து எந்தவிதமான காரணமும் இன்று தொடரை ரத்து செய்து நியூஸிலாந்து அணி நாடு திரும்பி அவர்களை அவமானப்படுத்தியது.

அதற்கு சரியான பதிலடியை பாகிஸ்தான் அளித்தால், அந்தவெற்றி இந்தியாவுக்கு உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஷார்ஜா மைதானம் மிகச்சிறியது.

இரு அணிகளிலும் பிக்ஹிட்டர்ஸ் இருப்பதால், ரன்வேட்டைக்கு குறைவில்லாமல் இருக்கும். குறிப்பாக ஷார்ஜா மைதானம் பாகிஸ்தானுக்கு ராசியானது என்பதால், வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பார்கள்.

நியூஸிலாந்துக்கு அணிதங்கள் நாட்டுக்கு வந்துவிட்டு விளையாடாமல் சென்றதற்கு பழிதீர்க்க நினைத்து வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நல்லதாக அமையும்.