ரசிகர்களுக்கு தலா 5000 ரூபாய் – சூர்யா, கார்த்தி உதவி

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து சூர்யாவின் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தார்கள். கொரோனா முதல் அலையின் போது தொடர்ச்சியாக சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினமும் உணவளித்து வந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தினமும் வெளியாகும்.

அதே போல், 2-வது அலையிலும் தொடர்ச்சியாக உதவிகள் செய்யத் தொடங்கினார்கள். இது சூர்யாவை மிகவும் நெகிழ வைத்தது. தற்போது ரசிகர்களுக்கு நிதியுதவி செய்துள்ளார் சூர்யா.

கொரோனாவால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் தனது ரசிகர்களின் பட்டியலைக் கேட்டுப் பெற்றுள்ளார். அவர்களில் 250 பேருக்கு, ஆளுக்கு 5000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் சூர்யா. அவருடைய 2டி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. சூர்யாவின் இந்த உதவியினால் அவருடைய ரசிகர்கள் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

அதே போல், கார்த்தியும் தனது ரசிகர்களில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்போரின் பட்டியலைப் பெற்றுள்ளார். அந்தப் பட்டியலில் சுமார் 200 பேருக்கு ஆளுக்கு 5000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

சூர்யா – கார்த்தி இந்த இருவரின் உதவியையும் அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.