அதிகரிக்கும் காற்றுமாசு; டெல்லி – என்சிஆர் பகுதிகளில் மீண்டும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

காற்றின் தரம் மிகவும் குறைந்துவருவதைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், டெல்லி மர்றும் தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்) பகுதிகளில் கட்டுமானப்பணிகளை செய்வதற்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டதால் ஊதியமில்லாமல் சிரமப்படும் தொழிலாளர்களுக்கு, மாநிலங்கள் தொழிலாளர்கள் சிறப்பு செஸ் மூலம் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக் கோடி ஆதித்யநா துபே என்பவர் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின்போது, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின்தரம் ஓரளவுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி முதல் கட்டுமானப்பணிகளை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.


ஆனால், இடைப்பட்ட நாட்களில் காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நடத்த தடை விதித்து நேற்று இரவு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இது குறித்து தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் டிஓய் சந்திரசூட், சூர்யகாந்த் அமர்வு இடைக்கால உத்தரவு நேற்று பிறப்பித்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது “காற்றின் தரம் குறைந்துவருவதையடுத்து, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளித்த உத்தரவை திரும்பப் பெறுகிறோம்.

காற்றுதர மேலாண்மை ஆணையம், கடந்த காலத்தில் இருந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து காற்றின் தரம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டும்.

காற்றின் தரம் மோசமடையும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, காற்றின் தரம் மோசமடைவதை எதிர்பார்த்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

இதற்காக புள்ளியியல் பிரிவு, வானிலை மையத்தைச்சேர்ந்த வல்லுநர்களை இதில் ஈடுபடுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.


ஆதலால், டெல்லி, என்சிஆர், உ.பி. ஹரியானா, பஞ்சாப் ராஜஸ்தான் மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த 22ம் தேதி நாங்கள் பிறப்பித்த டெல்லி,என்சிஆர் பகுதிகளில் கட்டுமானப்பணிகளுக்கு அனுமதியளித்ததை திரும்பப் பெறுகிறோம்.


அதேசமயம், காற்றுமாசு இல்லாத பிற பணிகளான பிளம்பிங் பணிகள், உள்ளரங்கு அலங்காரங்கள், மின்சாரப் பணிகள், தச்சுப்பணி ஆகியவற்றை மேற்கொள்ளத் தடையில்லை.


தொழிலாளர் செஸ் என்ற பெயரி்ல் மாநிலங்கள் வசூலித்த தொகையிலிரந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்ட காலத்தில் வழங்கிட வேண்டும்.


காற்றின் மாசு அதிகரித்துவருவதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, தடுப்பு நடவடிக்கைள் எடுப்பது போன்றவற்றை காற்றுதர மேலாண்மை ஆணையம் எடுக்க வேண்டும். இந்த வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.