பங்குச்சந்தையில் திடீர் சரிவு! சென்செக்ஸ் 250 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டி தடுமாற்றம்

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் சென்ற நிலையில் இன்று தடுமாறி சரிவை நோக்கி பயணிக்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த தரவுகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது, இதனால் பொருளாதார மந்தநிலை அந்நாட்டில் வரலாம், பெரு நிறுவனங்களின் லாபங்கள் குறைந்து வருகின்றன என்பது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் விலை சரிந்தன.

பிப்ரவரி 1ம் தேதி இந்தியாவில் பொது பட்ஜெட்டும், அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டமும் நடக்கிறது. இந்த இரு அம்சங்களையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் பங்குகளில் லாப நோக்கம் கருதி வாங்குவதற்குப் பதிலாக விற்று வருகிறார்கள். இதனால்தான் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் இந்தியப் பங்குச்சந்தையில் சரிவு தொடர்ந்து வருகிறது.

காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 264புள்ளிகள் குறைந்து, 60,713 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 88 புள்ளிகள் சரிந்து, 18,029 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், 23 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன, 7 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன.

மாருதி, டாடா ஸ்டீல், மகிந்திராஅன்ட் மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டியில் ஆட்டோமொபைல், ஊடகத்துறை பங்குகளைத் தவிர அனைத்து துறைப் பங்குகளும் சரிவில் உள்ளன. ஐடி, உலோகம், பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட், எப்எம்சிஜி உள்ளிட்ட துறைப் பங்குகள் வீழ்ச்சியில் உள்ளன.

நிப்டியில் டாடா மோட்டார்ஸ், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, கிராஸிம்இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸூகி பங்குகள் லாபத்தில் நகர்கின்றன.

அதானி என்டர்பிரைசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் அதானி போர்ட், லார்சன் அன்ட்டூப்ரோ, இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் சரிவில் உள்ளன