நடிகர் விஷால் வீட்டில் கல் வீச்சு..! அண்ணா நகரில் பரபரப்பு..!

சென்னை, அண்ணா நகர் பகுதியில் நடிகர் விஷால் வீட்டில், கற்கள் வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலருமான விஷால். சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வீட்டுக்கு நேற்று இரவு காரில் வந்த சில மர்ம நபர்கள், கற்களை வீசினர்.

இதில் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதைப் பார்த்த அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இது குறித்து விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்றுபுகார் செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

கல் வீச்சு சம்பவம் நடைபெற்றபோது, நடிகர் விஷால் வெளியூரில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.