கிளம்பிட்டாங்கயா: ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் பயிற்சியைத் தொடங்கினர்

ஜோஃப்ரா ஆர்ச்சர்

சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ் இன்று பயிற்சியைத் தொடங்கினர்.

இந்த 3 வீரர்களுக்கும் நடத்தப்பட்ட 2-ம் கட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால், இவர்கள் முதல்கட்ட பயிற்சியை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கினர்.

அதுமட்டுமல்லாமல் இந்த 3 வீரர்களும், சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. இங்கிலாந்து அணி சென்னைக்கு வருவதற்கு முன்கூட்டியே இவர்கள் சென்னை வந்துவிட்டதால், 2-வது கட்ட கொரோனா பரிசோதனையை முடித்துவிட்டனர்.

ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பணிச்சுமை காரணமாக, இலங்கைத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது, ரோரி பர்ன்ஸுக்கு முதல் குழந்தை பிறந்திருந்ததால், அவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த மூன்றுவீரர்களும் 2 முறை பிசிஆர் பரிசோதனையில் தேறிவிட்டதால், இன்று பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் ஊடக மேலாளர் டேனி ரூபென் கூறுகையி்ல் “ ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், பர்ன்ஸ் மூவரும் பிசிஆர் பரிசோதனையில் தேறிவிட்டனர். இன்று முதல் அடுத்த3 நாட்களுக்கு நாள்தோறும் 2மணிநேரம் பயிற்சி்யில் ஈடுபடுவார்கள். ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கும் 2-வது பிசிஆர் பரிசோதனை நேற்று முடிந்தது, யாருக்கும் கொரோனா இல்லை. விரைவில் அவர்களும் பயிறச்சியில் ஈடுபடுவார்கள். பிப்ரவரி 2-ம் தேதி ஒட்டுமொத்த அணியும் பயிற்சியில் ஈடுபடும்” எனத் தெரிவித்தார்.