2 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ், நிப்டி ஏற்றத்துடன் நிறைவு

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வாரத்தின் முதல்நாளான இன்று கடும் ஊசலாட்டம் இருந்தது.

சரிவிலிருந்து தொடங்கிபின்னர் உயர்ந்து, அதடுத்து சரிந்து இறுதியாக ஏற்றத்தில் முடிந்துள்ளது.

அமெரிக்க நிறுவமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையால் கடந்த வாரத்தில்கடைசி இருநாட்கள் சந்தையில் பெரும் களேபரம் ஏற்பட்டது. இரு நாட்களில் முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

அதிலும் குறிப்பாக அதானிகுழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்து, ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஹிண்டன்பர்க் மற்றும் அதானி குழுமத்துக்கு எதிராக வார்த்தை மோதலும், அறிக்கை போரும் தொடர்ந்து வருகிறது.

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டிவீத அறிவிப்பு குறித்து முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசின் கடைசி முழுபட்ஜெட் என்பதால், முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கடந்த வாரத்தில் சரிந்த அதானியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் ஓரளவு மீண்டன. அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் நிப்டியில்லாபமடைந்தது, ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் பங்குகளும் உயர்ந்தன.

ஆனால், அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன்,அதானி வில்மர் ,அதானி டோட்டல் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

கடந்த 2 நாட்களில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.83.72 கோடிக்கு பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர். மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அறிவிப்பை எதிர்ப்பார்த்து உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

காலையில் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் பின்னர் உயர்ந்து, மீண்டும் சரிந்தது. ஆனால், பிற்பகலுக்குப்பின் சூடுபிடிக்கத் தொடங்கி, ஏற்றத்தை நோக்கி நகர்ந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 169 புள்ளிகள் உயர்ந்து, 59,500 புள்ளிகளில் முடிந்தது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 45 புள்ளிகள் சரிந்து, 17,648 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையி்ல் உள்ள 30 முக்கியநிறுவனப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குள் லாபத்தில் முடிந்தன. மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.

நிப்டியில் அதானி என்டர்பிரைசஸ், பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் முடிந்தன.

பவர்கிரிட், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, லார்சன்அன்ட் டூப்ரோ, இன்டஸ்இன்ட்வங்கிப் பங்குகள் சரிவில் முடிந்தன.

நிப்டியில் முதலீட்டுப் பொருட்கள், உலோகம், எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1 முதல் 5 சதவீதம் வரை சரிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஒரு சதவீதம் உயர்ந்தன