மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் கொண்டு வரலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டப்பேரவைகளில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ‘சமதா அந்தோலன் சமிதி’ எனும் தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தது.

உச்ச நீதிமன்றம்

அதில், “ ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவைகளில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற எந்த அதிகாரமும் இல்லை. மத்தியஅரசின் சட்டங்கள் அனைத்தும் அரசியலமைப்பின் 7-வது அட்டவணைக்குள் வந்துவிடும். ஆதலால் இந்தத் தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சவுமியா சக்ரவர்த்தி ஆஜரானார்.

வழக்கறிஞர் சவுமியா சக்ரவர்த்தி வாதிடுகையில், “ மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக சில மாநில அரசுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்து அவை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது, அந்தச் சட்டத்தை ரத்து செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தியது. ஒரு சட்டம் நல்லதா அல்லது மோசமானதா என கேரள அரசு கருத்துக் கூறக் கூடாது” எனத் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “ தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது என்பது கேரள சட்டம் பேரவையின் கருத்து. மக்கள் சட்டத்துக்கு விரோதமாக நடக்கவேண்டும் என்று சட்டப்பேரவை கூறவில்லையே. சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தைத் தானே வலியுறுத்தினார்கள். இது கருத்து தான், கருத்துத் தான் சட்டப்பேரவை கூறியுள்ளது. அவர்கள் சட்டம் கொண்டு வரவில்லை.

உச்ச நீதிமன்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ரத்து செய்ய கேரள சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுகிறீர்கள். அப்படியென்றால், சட்டப்பேரவைக்கு தங்கள் கருத்துக்களைக் கூற உரிமை இருக்கிறது தானே” எனத் தெரிவித்தார்.

அதற்கு வழக்கறிஞர் சக்ரவர்த்தி “ கேரள மாநில நலனுக்கு தொடர்பில்லாத ஒரு விஷயத்தில் சட்டப்பேரவை தீர்மானம் கொண்டு வரக் கூடாது என்று பேரவை விதிகள் தெளிவாக இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “ கேரள அரசு கொண்டு வந்த தீர்மானம் மாநில நலனைக் கருத்தில் வைத்து கொண்டு வரப்படவில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை அடுத்த 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுதாரர் வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.