கத்தியால் குத்தி, தங்க கட்டி, பணம் பறிப்பு; கைதான 5 குருவிகள் அப்ரூவர் ஆனதால், நாடகமாடிய நபர் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் கத்தியால் குத்தி, பணம், தங்க கட்டி  ஆகியவை பறித்து சென்ற வழக்கில் குருவிகளான 5 பேர் கைதாகினர். அவர்கள் போட்டு உடைத்த உண்மையால், கொள்ளை நாடகமாடிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை, திருவல்லிக்கேணி, முக்தருனிஷா பேகம் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது(41). இவர், கடந்த மாதம் 24ம் தேதி அன்று காலை நேரத்தில், அங்குள்ள ஓ.வி.எம் தெருவில் நண்பர் தங்கியிருந்த ஏ.எம்,எஸ் விடுதி ஒன்றிக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, முகமுடி அணிந்திருந்த 5 மர்ம நபர்கள், சாகுல் ஹமீதுவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

அவர் வைத்திருந்த பையை பிடுங்கினர். அவர் தர மறுக்கவே, கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 69 கிராம் தங்க கட்டி மற்றும் அவர் வந்த பைக்கை பறித்து, அங்கிருந்து தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில், சாகுல் ஹமீதுவுக்கு, கை-கால்களில்  பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினார்.

திருவல்லிக்கேணி போலீசார் அவரிடம் புகாரை வாங்கி விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, 5 பேர் கும்பலை கைது செய்தனர்.  

விசாரணையில், கைதான 5 பேரும், கடத்தல் குருவிகள் என தெரியவந்தது.

மேலும், சாகுல் ஹமீதுவின் கூட்டாளிகள் எனவும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், கடலூரை சேர்ந்த விஜய்(21), சவுகார்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ் (24) திருவல்லிக்கேணியை சேர்ந்த சாமியா ஹூமாயூன் (32), ஏழுகிணறு பகுதியை  சேர்ந்த ராம்குமார் (25). போஸ்(24)  ஆகியோர் என தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சாகுல் ஹமீதுவும்  கடத்தல் குருவி எனும் வேலை பார்த்து வந்தார்.

நண்பர் தந்த பணம், தங்க கட்டியை கைதான சக குருவிகள் எனப்படும் கூட்டாளிகளுடன் பங்கு போட்டுக்கொள்ள், அவரே இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

கைதான 5 பேரும், போலீசில், வாக்குமூலமாகவே தந்தனர், இதனால், பொய் புகார் அளித்த சாகுல் ஹமீதுவை போலீசார் கைது செய்ய இருந்தனர்.

மேலும், நாடகமாடியது, தங்கம் தந்த நண்பருக்கும் தெரிந்தது, இதனால், பயத்தில் இருந்த சாகுல் ஹமீது நேற்று இரவு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருவல்லிக்கேணி போலீசார், சாகுல் ஹமீது உடலை கைப்பற்றி, தங்கம் தந்த நண்பர் யார் என விசாரிக்கின்றனர்.